நாக்பூரிலிருந்து மும்பை நோக்கிச் சென்ற துரந்தோ எக்ஸ்பிரஸ் ரயிலில், பிரசவ வலியால் துடித்த 36 வயதுப் பெண் ஒருவருக்கு, மருத்துவ உபகரணங்கள் ஏதுமின்றி ஒரு செவிலியர் ரயிலிலேயே வெற்றிகரமாகப் பிரசவம் பார்த்த சம்பவம் நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
ரயில்வே உதவி எண் 139 அடுத்த நிலையத்தில் தான் உதவி கிடைக்கும் என்று கூறிய நிலையில், பிரசவம் நெருங்கியதால், ரயிலில் பயணித்த பாம்பே மருத்துவமனை செவிலியர் மீனு பைசாரே உடனடியாகச் செயல்பட்டார்.
கையுறைகள், கத்தரிக்கோல் போன்ற அடிப்படை மருத்துவக் கருவிகள் கூட இல்லாத சூழலில், பயணிகள் உதவியுடன் பெட்சீட்களைத் திரையாகக் கட்டி, கிருமிநாசினி மூலம் சுத்தம் செய்த கத்தியைப் பயன்படுத்திப் பத்திரமாகப் குழந்தையைப் பெற்றெடுத்தார்.
தாய் மற்றும் பச்சிளம் குழந்தை இருவரும் நலமாக இருப்பதாகப் பரிசோதித்த பிறகு, ரயில் சாலிஸ்கான் நிலையத்தை அடைந்ததும் அவர்கள் மருத்துவமனைக்கு மாற்றப்பட்டனர்.
செவிலியர் மீனு பைசாரேவின் துணிச்சலான மற்றும் மனிதாபிமானமிக்கச் செயலுக்குப் பாராட்டுகள் குவிகின்றன. இச்சம்பவம் ரயில்களில் அவசரக்கால மருத்துவப் பெட்டிகளில் மகப்பேறுக்கான அடிப்படை உபகரணங்களை வைத்திருக்க வேண்டியதன் அவசியத்தை மீண்டும் ஒருமுறை உணர்த்தியுள்ளது.
