மகாராஷ்டிர மாநிலம் பத்னேராவில் இருந்து அகோலா நோக்கிச் சென்ற ரயிலில் இளம்பெண் ஒருவரிடம் அநாகரிகமாக நடந்துகொண்ட நபரை, சக பெண் பயணிகள் தர்ம அடி கொடுத்து, முகத்தில் லிப்ஸ்டிக் பூசி வினோத தண்டனை வழங்கிய சம்பவம் சமூக வலைத்தளங்களில் தற்போது காட்டுத்தீயாய் பரவி பெரும் விவாதத்தை ஏற்படுத்தியுள்ளது.
ரயிலில் பயணம் செய்துகொண்டிருந்த பெண் ஒருவரிடம், பயணி ஒருவர் அநாகரிகமான முறையில் தவறாக நடக்க முயன்றதாகக் கூறப்படுகிறது. இதனால் ஆத்திரமடைந்த அந்தப் பெட்டியிலிருந்த பெண் பயணிகள் அனைவரும் ஒன்று திரண்டு, அந்த நபரைச் சூழ்ந்துகொண்டனர். ரயிலில் பெண்கள் பாதுகாப்பு கேள்விக்குறியாவதை சகித்துக்கொள்ள முடியாத அவர்கள், அந்த நபரை ஓடும் ரயிலிலேயே சரமாரியாகத் தாக்கி தங்களின் ஆக்ரோஷத்தை வெளிப்படுத்தினர்.
Akola: Women passengers on Badnera-Akola train beat a man accused of molesting a girl, then applied lipstick to his face as punishment. Now sparking massive reactions online pic.twitter.com/cfmi0VUHFN
— Ghar Ke Kalesh (@gharkekalesh) July 17, 2026
அடி வெளுத்ததோடு நிறுத்தாமல், பெண்களுக்கு எதிரான குற்றங்களில் ஈடுபடுவோருக்குப் பாடம் புகட்டும் வகையில், தங்களின் கைப்பையிலிருந்த லிப்ஸ்டிக்கை எடுத்து அந்த நபரின் முகம் முழுவதும் பூசி அவமானப்படுத்தினர். அக்காட்சிகளை ரயிலில் இருந்த மற்ற பயணிகள் தங்களின் செல்போனில் வீடியோவாகப் பதிவு செய்தனர். இந்த வீடியோ தற்போது சமூக வலைத்தளங்களில் வெளியாகி மிக வேகமாகப் பரவி வருகிறது.
இந்த விசித்திரமான விழிப்புணர்வு மற்றும் தண்டனை முறை குறித்து இணையவாசிகள் மத்தியில் இருவேறு கருத்துக்கள் எழுந்துள்ளன. ஒரு தரப்பினர், “பெண்களுக்குத் தொல்லை கொடுப்பவர்களுக்கு இதுபோன்ற உடனடித் தண்டனையே சரி, இது மற்றவர்களுக்கு ஒரு பாடமாக அமையும்” என்று பெண்களின் தைரியத்தைப் பாராட்டி வருகின்றனர். மற்றொரு தரப்பினரோ, “குற்றம் செய்தவரை சட்டத்தின் முன் நிறுத்தி போலீசாரிடம் ஒப்படைப்பதே முறையான வழி” என்று கருத்து தெரிவித்து வருகின்றனர்.
