அமெரிக்காவின் நியூயார்க் நியூ ஜெர்சி மைதானத்தில் நடைபெறவுள்ள 2026 ஃபிஃபா உலகக்கோப்பை கால்பந்து இறுதிப்போட்டியில், நடப்பு சாம்பியனான அர்ஜென்டினா அணிக்குத் தனது முழு ஆதரவை வழங்குவதாக இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளார். ஸ்பெயின் மற்றும் அர்ஜென்டினா அணிகளுக்கு இடையேயான இந்த இறுதிப்போட்டி உலக அளவில் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ள நிலையில், நெதன்யாகுவின் இந்த அரசியல் கலந்த விளையாட்டு ஆதரவு தற்போது பேசுபொருளாகியுள்ளது.

இஸ்ரேலுக்கான அர்ஜென்டினா தூதரை நேரில் சந்தித்த பிரதமர் நெதன்யாகு, லியோனல் மெஸ்ஸி தலைமையிலான அர்ஜென்டினா அணி மீண்டும் உலகக்கோப்பையைத் தக்கவைக்க வாழ்த்துகளைத் தெரிவித்தார். இந்தச் சந்திப்பின் போது அர்ஜென்டினா தூதர், அந்த நாட்டின் புகழ்பெற்ற நீலம் மற்றும் வெள்ளை நிற கால்பந்து ஜெர்சியை நெதன்யாகுவிற்குப் பரிசாக வழங்கினார். அதனைப் பெற்றுக்கொண்ட நெதன்யாகு, கேமராக்களின் முன்னால்அர்ஜென்டினா முன்னேறிச் செல்லட்டும் என்று உற்சாகமாக முழங்கினார்.

அர்ஜென்டினா அதிபர் ஜேவியர் மிலே-யுடன் தமக்கு இருக்கும் சுமுகமான உறவு குறித்துப் பேசிய நெதன்யாகு, “நான் அர்ஜென்டினா அணியின் தீவிர ரசிகன் என்பதை மறைக்க விரும்பவில்லை. இஸ்ரேல் குடிமக்கள் பெரும்பாலானோரும் அர்ஜென்டினாவையே ஆதரிப்பார்கள் என நம்புகிறேன். ஏனெனில், அதிபர் மிலே இஸ்ரேலுடனான உறவில் பெரும் புரட்சிகரமான மாற்றங்களை ஏற்படுத்தியுள்ளார். அர்ஜென்டினாவை விடச் சிறந்த நண்பர்கள் நமக்கு இல்லை. அதனால்தான் இந்த இறுதிப்போட்டியில் அவர்களை ஆதரிக்கிறோம் என்று விளக்கமளித்துள்ளார்.

நெதன்யாகுவின் இந்த அர்ஜென்டினா ஆதரவுக்குப் பின்னால் ஸ்பெயின் நாட்டுடனான அரசியல் மோதலும் ஒரு முக்கியக் காரணமாகப் பார்க்கப்படுகிறது. ஸ்பெயின் அணியின் இளம் நட்சத்திர வீரர் லாமின் யமால், பார்சிலோனா கிளப் சாம்பியன்ஷிப் கொண்டாட்டத்தின் போது பாலஸ்தீனக் கொடியை ஏந்தி தனது ஆதரவை வெளிப்படுத்தியது இஸ்ரேல் தரப்பில் அதிருப்தியை ஏற்படுத்தியிருந்தது. மேலும், ஈரான் மீதான இஸ்ரேல்-அமெரிக்கப் போருக்கு எதிர்ப்புத் தெரிவிக்கும் வகையில், அமெரிக்க ராணுவ விமானங்கள் தனது வான்வெளியைப் பயன்படுத்த ஸ்பெயின் அரசு தடை விதித்திருந்ததும், இந்த உலகக்கோப்பை இறுதிப்போட்டியில் இஸ்ரேல், ஸ்பெயினுக்கு எதிராக அர்ஜென்டினாவை ஆதரிக்க வழிவகுத்துள்ளது.