இந்தியா மற்றும் இங்கிலாந்து அணிகளுக்கு இடையிலான ஒருநாள் தொடரின் இறுதிப் போட்டி, கிரிக்கெட்டின் தாயகமான லார்ட்ஸ் மைதானத்தில் மிக முக்கியமாகப் பார்க்கப்படுகிறது. தொடரின் வெற்றியாளரைத் தீர்மானிக்கும் இந்தத் திக் திக் மோதலில், இந்திய அணியின் தூண்களாகத் திகழும் ரோகித் சர்மா மற்றும் விராட் கோலி ஆகியோர் ஒரு பிரம்மாண்டமான சாதனையை படைத்துள்ளனர். சர்வதேச கிரிக்கெட் அரங்கில் இந்தியாவிற்காக இருவரும் இணைந்து விளையாடும் 400-வது போட்டி இதுவாகும். இந்த மைல்கல்லை எட்டும் முதல் இந்திய ஜோடி என்ற பெருமையை இவர்கள் பெற்றுள்ளனர்.
உலக கிரிக்கெட் வரலாற்றைப் பார்த்தால், இவ்வளவு நீண்ட காலமாக இணைந்து விளையாடிய ஜோடிகள் விரல் விட்டு எண்ணக்கூடியவர்களே. இதுவரை சர்வதேச அளவில் 400 அல்லது அதற்கு மேற்பட்ட போட்டிகளில் ஒன்றாகக் களம் கண்டது வெறும் 5 ஜோடிகள் மட்டுமே. அந்தப் பட்டியலில் தற்போது ரோகித் – விராட் இணை ஆறாவதாக இணைந்துள்ளது. இலங்கை ஜாம்பவான்களான குமார் சங்கக்காரா மற்றும் மகேல ஜெயவர்த்தனே ஆகியோர் 550 போட்டிகளுடன் முதலிடத்தில் உள்ளனர். அடுத்தடுத்த இடங்களில் இலங்கை மற்றும் தென் ஆப்பிரிக்காவின் புகழ்பெற்ற ஜோடிகள் இடம் பெற்றுள்ளன.
இந்த வரலாற்றுச் சாதனையை எட்டியதன் மூலம், இந்திய கிரிக்கெட்டின் பழைய சாதனையை ரோகித் – விராட் ஜோடி முறியடித்துள்ளது. இதற்கு முன்னதாக, இந்தியாவின் சச்சின் டெண்டுல்கர் மற்றும் ராகுல் டிராவிட் இணை 391 சர்வதேசப் போட்டிகளில் ஒன்றாக விளையாடியதே இந்திய அளவில் அதிகபட்ச சாதனையாக இருந்தது. அந்த சாதனையை இப்போது ரோகித் மற்றும் விராட் கடந்து சென்றுள்ளனர். இந்திய கிரிக்கெட் ரசிகர்களுக்கு இந்தத் தகவல் பெருமிதத்தை அளித்துள்ளது.
லார்ட்ஸ் மைதானம் என்றாலே உணர்ச்சிகரமான பல தருணங்களுக்குச் சாட்சியாகத் திகழும். அத்தகைய சிறப்புமிக்க மைதானத்தில் இந்த இரு நட்சத்திரங்களின் 400-வது கூட்டணி, அந்தப் போட்டியைப் பார்க்கும் அனைவரின் நினைவிலும் நிலைத்து நிற்கும் என்பது உறுதி.
