அமெரிக்காவில் சொந்தமாக ஒரு வீடு வாங்க வேண்டும் என்பது பலரது கனவாக இருக்கலாம். ஆனால், அங்கு வீடு வாங்குவதுடன் வேலை முடிந்துவிடுவதில்லை; அந்த நாட்டின் கடுமையான வீட்டு விதிமுறைகளையும் நாம் பின்பற்ற வேண்டும். இதனை அறியாத ஒரு இந்தியக் குடும்பத்திற்கு, அவர்கள் வாங்கிய புதிய வீட்டின் புதுமனை புகு விழா கொண்டாட்டத்தின் போது நேர்ந்த ஒரு அதிர்ச்சி அனுபவம், தற்போது சமூக வலைத்தளங்களில் வைரலாகி பெரும் விவாதத்தை ஏற்படுத்தியுள்ளது.
அமெரிக்காவின் சிகாகோ நகரில் வசித்து வரும் இந்திய உள்ளடக்கக் உருவாக்குநரான குஞ்சன் தேவரா என்பவர் இந்த அதிர்ச்சிகரமான சம்பவத்தைத் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பகிர்ந்துள்ளார். அவர் சிகாகோவில் ஒரு புதிய வீடு வாங்கி, அதற்கு இந்தியப் பாரம்பரிய முறைப்படி பூஜைகள் செய்து, வீட்டின் வெளிப்புறத்தை வண்ணமயமாக அலங்கரித்துள்ளார். ஆனால், இந்த மகிழ்ச்சி நீடிப்பதற்குள், வீட்டின் வெளிப்புற அலங்காரத்தை உடனடியாக அகற்றக் கோரி அவருக்கு ஒரு அதிகாரப்பூர்வ நோட்டீஸ் அனுப்பப்பட்டது.
View this post on Instagram
இந்தியாவில் பண்டிகைக் காலங்களிலும், சுப நிகழ்ச்சிகளின் போதும் வீடுகளைத் தங்களுக்குப் பிடித்தவாறு அலங்கரிப்பது வழக்கம். ஆனால், அமெரிக்காவின் பெரும்பாலான குடியிருப்புப் பகுதிகளில் ‘ஹோம்ஓனர்ஸ் அசோசியேஷன்’ என்ற அமைப்பு செயல்படுகிறது. இந்த அமைப்பின் விதிகளின்படி, வீட்டின் வெளிப்புற அலங்காரங்களைத் திட்டமிட்ட காலத்திற்கு மேல் வைத்திருக்க அனுமதி இல்லை. மீறினால் பெரும் தொகை அபராதமாக விதிக்கப்படும். இந்த HOA அமைப்பானது, அப்பகுதியின் தூய்மை, அழகு மற்றும் ஒழுங்குமுறையைப் பராமரிக்க மாதந்தோறும் சுமார் 300 டாலர் (இந்திய மதிப்பில் சுமார் ₹29,000) கட்டணமாகப் பெறுகிறது.
இந்தத் தொகையின் மூலம் புல்வெளிகளைப் பராமரிப்பது, பொது இடங்களைச் சுத்தம் செய்வது மற்றும் குளிர்காலத்தில் பனியை அகற்றுவது போன்ற பணிகளை அந்த அமைப்பு செய்கிறது. குஞ்சன் பகிர்ந்த இந்த வீடியோ சமூக வலைத்தளங்களில் வேகமாகப் பரவி வருகிறது. பல இந்தியர்கள் தங்களது கருத்துக்களைப் பகிர்ந்து, “வெளிநாடுகளில் குடியேறும்போது அங்கிருக்கும் உள்ளூர் சட்டங்களையும், விதிமுறைகளையும் முன்கூட்டியே தெரிந்து கொள்வது தேவையற்ற அபராதங்களில் இருந்து நம்மைக் காக்கும்” என்று பதிவிட்டு வருகின்றனர்.
