அவசரமும் சுயநலமும் நிறைந்த இந்தத் தற்காலச் சமூகத்தில், தன் பேருந்தில் பயணம் செய்த நூற்றுக்கணக்கான பயணிகளின் நேரத்தை விடவும், ஆற்றில் அடித்துச் செல்லப்பட்ட முன்பின் தெரியாத ஒரு சிறுமியின் உயிரே முக்கியம் எனக் கருதி, நட்டநாடு ஆற்றில் குதித்து மீட்ட பேருந்து ஓட்டுநரின் வீரச் செயல் தற்சமயம் சமூக வலைதளங்களில் பரவி, பலரது பாராட்டுக்களையும் பெற்றுள்ளது.
கேரள மாநிலத்தைச் சேர்ந்த 18 வயது மாணவி ஒருவர், பெரியாற்றில் குதித்து தற்கொலைக்கு முயன்ற அதிர்ச்சிச் சம்பவத்தின் போது இந்த மனிதாபிமான மீட்பு அரங்கேறியுள்ளது. இளம்பெண் ஆற்றில் குதித்ததைக் கண்ட அப்பகுதி மக்கள் என்ன செய்வதென்று தெரியாமல் கரையோரம் கூடி வேடிக்கைப் பார்த்துக் கொண்டிருந்தனர். அந்தப் பெண் ஆற்றின் மிக ஆழமான மற்றும் ஆபத்தான பகுதியை நோக்கி அதிவேகமாக அடித்துச் செல்லப்பட்டார்.
அதே நேரத்தில், பயணிகளுடன் வேகமாக வந்து கொண்டிருந்த ‘ தனியார் பேருந்தில், 41 வயதான ஓட்டுநர் அஜேஷ் மஞ்சாலி பாலத்தின் அருகே கூட்டத்தைக் கண்டு திடீரென நிறுத்தினார். ஆற்றில் ஒரு உயிர் தத்தளிப்பதைக் கண்ட அவர், அடுத்த நொடி எதையும் யோசிக்காமல், தனக்கு நீச்சல் தெரியும் என்ற ஒரே தைரியத்தில் ஆற்றில் குதித்தார்.
ஆற்றின் கடுமையான நீரோட்டத்தையும் பொருட்படுத்தாமல் சுமார் 100 மீட்டர் தூரம் வேகமாக நீந்திச் சென்ற அஜேஷ், மயக்க நிலையிலிருந்து அந்தப் பெண்ணின் தலைமுடியைப் பிடித்து இழுத்தவாறே பத்திரமாகக் கரைக்குக் கொண்டு வந்தார். அப்போது காத்திருந்த உள்ளூர் மக்கள் உடனடியாக ஓடிவந்து அந்தப் பெண்ணை மீட்டு, சிகிச்சைக்காக அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். நீட் நுழைவுத் தேர்வில் தான் எதிர்பார்த்த மதிப்பெண்கள் கிடைக்காததால் ஏற்பட்ட கடுமையான மன உளைச்சல் காரணமாக அந்த மாணவி இந்த விபரீத முடிவை எடுத்தது விசாரணையில் தெரியவந்துள்ளது.
தற்சமயம் அவர் ஆபத்தான கட்டத்தைத் தாண்டி நலமுடன் இருப்பதாக மருத்துவர்கள் தெரிவிக்கின்றனர். இந்தச் சம்பவத்திற்குப் பிறகு, நனைந்த ஆடைகளுடனேயே மீண்டும் பேருந்தின் ஸ்டீயரிங்கைப் பிடித்த ஓட்டுநர் அஜேஷ், பேருந்தில் இருந்து அனைத்துப் பயணிகளையும் பாதுகாப்பாக அவர்களின் இலக்குகளில் சேர்த்தது ஒட்டுமொத்த இணையவாசிகளையும் நெகிழ வைத்துள்ளது.
