உத்தரப்பிரதேச மாநிலம் மதுரா மாவட்டத்தில் கணவன்-மனைவி இடையே ஏற்பட்ட குடும்பத் தகராறில், மனைவியை கணவன் கொடூரமாகத் தாக்கிய அதிர்ச்சிச் சம்பவம் வெளிச்சத்திற்கு வந்துள்ளது. வீட்டில் இருவருக்கும் இடையே ஏற்பட்ட வாக்குவாதம், எதிர்பாராதவிதமாக வன்முறையாக மாறியது. ஆத்திரமடைந்த கணவன், தன் மனைவியின் உதட்டைக் பற்களால் கடித்துக் குதறியுள்ளார்.
இக்கொடூரமானச் செயல் அப்பகுதியில் பெரும் பரபரப்பையும் அதிர்ச்சியையும் ஏற்படுத்தியுள்ளது. இந்தத் தாக்குதலால் கடுமையான காயமடைந்த அப்பெண், ரத்த வெள்ளத்தில் அலறியுள்ளார். உடனடியாக அவரது குடும்பத்தினர் அவரை மீட்டு அருகில் உள்ள மருத்துவமனைக்குச் சிகிச்சைக்காகக் கொண்டு சென்றனர்.
உதட்டுப் பகுதியில் காயம் மிகவும் ஆழமாக இருந்ததால், அவருக்கு மருத்துவர்கள் 16 தையல்கள் போட வேண்டியிருந்தது. இந்தத் தீவிரமானக் காயத்தால் அப்பெண்ணால் பேச முடியாத அளவுக்குக் கடும் வேதனையை அனுபவித்தார்.
சம்பவம் குறித்துத் தகவலறிந்து வந்த காவல்துறையினரிடம், உதட்டில் தையல்கள் போடப்பட்டிருந்ததால் அப்பெண்ணால் நேரடியாகப் பேசி வாக்குமூலம் அளிக்க முடியவில்லை. இதனால், தனக்கு நேர்ந்த கொடூரத்தை ஒரு தாளில் எழுத்துப்பூர்வமாக எழுதிப் போலீசாரிடம் ஒப்படைத்தார்.
அதில் தனது கணவர், மைத்துனன் மற்றும் மாமியார் ஆகியோர் மீது குற்றம் சாட்டியுள்ளார். அந்தப் புகாரின் பேரில் வழக்குப் பதிவு செய்த காவல்துறையினர், இச்சம்பவம் தொடர்பாகத் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
