உத்தரப்பிரதேச மாநிலம் கான்பூரில், அரசு வேலை கிடைக்காத கடுமையான மன அழுத்தத்தின் காரணமாக 23 வயதான B.Tech தங்கப் பதக்கம் வென்ற பட்டதாரி இளைஞர் ஒருவர் தற்கொலை செய்து கொண்ட அதிர்ச்சி சம்பவம் நிகழ்ந்துள்ளது.

பொறியியல் படிப்பில் மிகச் சிறந்த மதிப்பெண்களுடன் தங்கப் பதக்கம் பெற்றிருந்தபோதிலும், அரசுப் பணிக்காக அவர் எழுதிய சுமார் 50-க்கும் மேற்பட்ட போட்டித் தேர்வுகளில் தொடர்ச்சியாகத் தோல்வியைத் தழுவியதாகக் கூறப்படுகிறது.

கல்வியில் சிறந்து விளங்கியும் தகுந்த வேலை கிடைக்காத விரக்தியும், தொடர் பின்னடைவுகளும் அந்த இளைஞரை இந்த தீவிர முடிவை நோக்கித் தள்ளியுள்ளன. தற்கொலை செய்து கொள்வதற்கு முன்பாக அந்த இளைஞர் எழுதிய உருக்கமான கடிதம் ஒன்று கைப்பற்றப்பட்டுள்ளது.

அதில், “மன்னித்துவிடுங்கள் அப்பா, என்னால் முடியவில்லை…” என்று குறிப்பிட்டு, தன் பெற்றோர் தன் மீது வைத்திருந்த எதிர்பார்ப்புகளை நிறைவேற்ற முடியாமல் போய விட்டதற்காகத் தன் தந்தையிடம் வேதனையுடன் மன்னிப்பு கேட்டுள்ளார்.

படிப்பு மற்றும் திறமை இருந்தபோதிலும், அரசு வேலை என்ற ஒற்றை இலக்கை அடைய முடியாத விரக்தியால் அவர் அடைந்த கடுமையான மன உளைச்சலை அந்த கடிதம் வெளிப்படுத்துகிறது. இச்சம்பவம் இன்றைய இளைஞர்கள் மத்தியில் நிலவும் கடும் போட்டி சூழலையும், அரசு வேலைக்காக அவர்கள் எதிர்கொள்ளும் அளப்பரிய மன அழுத்தத்தையும் வெளிச்சம்போட்டுக் காட்டியுள்ளது.

கல்வியில் சிறந்து விளங்கும் மாணவர்களாக இருந்தாலும், ஒரு குறிப்பிட்ட தேர்வின் தோல்வியை வாழ்க்கையின் முடிவாகக் கருதக்கூடாது என்றும், அரசு வேலையைத் தாண்டி சுயதொழில், தனியார் துறை எனப் பல தளங்களில் வாய்ப்புகள் கொட்டிக்கிடக்கின்றன என்பதைப் பெற்றோர்களும் சமூகமும் இளைஞர்களுக்குப் புரியவைக்க வேண்டும் என்றும் சமூக ஆர்வலர்கள் வலியுறுத்துகின்றனர்.