அமெரிக்காவுடனான தற்காலிகப் போர்நிறுத்த ஒப்பந்தத்தைத் தொடர்ந்து, ஈரானில் கடுமையான உள்நாட்டு அரசியல் நெருக்கடி ஏற்பட்டுள்ளது. அதிபர் மசூத் பெஜேஷ்கியான் மற்றும் அமெரிக்காவுடனான பேச்சுவார்த்தையில் ஈடுபட்ட மூத்த தலைவர்கள் இணைந்து, நாட்டில் ‘அரசியல் ஆட்சிக்கவிழ்ப்பு’ சதியில் ஈடுபடுவதாக அந்நாட்டின் தீவிர ஆதரவாளர்கள் குற்றம் சாட்டியுள்ளனர். அமெரிக்காவுடன் சமரசம் செய்துகொண்டதன் மூலம், தற்போதைய அரசு இஸ்லாமியப் புரட்சியின் அடிப்படைக் கொள்கைகளையும், உச்ச தலைவரின் வழிகாட்டுதல்களையும் காற்றில் பறக்கவிட்டுவிட்டதாக அவர்கள் கொந்தளித்துள்ளனர்.
மறைந்த ஈரானின் உச்ச தலைவர் அலி கமேனியின் இறுதி ஊர்வலத்தின் போது இந்த அதிருப்தி வெளிப்படையாக வெடித்தது. சிஎன்என் அறிக்கையின்படி, அமெரிக்காவுடன் பேச்சுவார்த்தை நடத்தி சில தடைகளில் இருந்து விலக்கு பெறக் காரணமாய் இருந்த வெளியுறவுத்துறை அமைச்சர் அப்பாஸ் அரக்சி மீது தீவிரவாதக் கும்பல் கல்வீசித் தாக்குதல் நடத்தியது. அவரை ‘துரோகி’ என்றும் ‘விலைபோனவர்’ என்றும் முழக்கமிட்டதால், அவர் உயிர் பிழைக்க அங்கிருந்து ஓட வேண்டியதாயிற்று. அதேபோல், அதிபர் பெஜேஷ்கியானை நோக்கி “சமரசம் பேசுபவர்கள் ஒழிக” என்ற கோஷங்கள் எழுப்பப்பட்டன. மேலும், அரசு ஆதரவு மதப் பாடகரான முகமது அலி பக்ஷி என்ற தீவிரப் போக்காளர், “அதிபரே, உச்ச தலைவரின் நிபந்தனைகள் நிறைவேற்றப்படாவிட்டால், எங்கள் கைகளில் பிளேடு இருக்கும், உங்கள் கழுத்து முன்னால் இருக்கும். உங்கள் வாழ்க்கையை நரகமாக்குவோம்” எனப் பகிரங்கமாகக் கொலை மிரட்டல் விடுத்துள்ளார்.
இந்த உள்நாட்டுக் குழப்பங்களுக்கு மத்தியில், ஈரானின் புதிய உச்ச தலைவராகப் பொறுப்பேற்க வேண்டிய அலி கமேனியின் மகன் மோஜ்தபா கமேனி இன்னும் மக்கள் முன்னிலையில் தோன்றாமல் மர்மமாக மறைந்திருப்பது பெரும் விவாதத்தைக் கிளப்பியுள்ளது. தனது தந்தையின் மரணத்திற்குப் பிறகு அவர் இதுவரை நாட்டு மக்களிடம் உரையாற்றவில்லை. உயிருக்கு அஞ்சி அவர் ஒளிந்திருக்கலாம் அல்லது உடல்நலக்குறைவால் பாதிக்கப்பட்டிருக்கலாம் என அஞ்சப்படுகிறது. இந்தச் சூழ்நிலையைப் பயன்படுத்திக் கொண்டு, அதிபர் பெஜேஷ்கியானும், நாடாளுமன்ற சபாநாயகர் காலிபஃப்பும் ஈரானின் அதிகாரத்தைக் கைப்பற்ற நாடகமாடுகிறார்கள் என ‘ஜெப்-ஏ-பாய்தாரி’ என்ற தீவிரவாதக் குழுவின் நாடாளுமன்ற உறுப்பினர் மஹ்மூத் நபாவியன் சமூக வலைதளங்களில் எச்சரிக்கை விடுத்துள்ளார்.
இருப்பினும், நாட்டின் பாதுகாப்புக்கும் அமெரிக்காவுடனான வியூகப் பேச்சுவார்த்தைக்கும் அச்சுறுத்தலாக விளங்கும் இந்த அதிரடித் தீவிரவாதக் குழுக்களை ஈரான் அரசு ஓரங்கட்டத் தொடங்கியுள்ளது. அதன்படி, அமெரிக்கப் பேச்சுவார்த்தையின் ரகசிய ஆவணங்களைக் கசியவிட்டு போர்நிறுத்தத்தைக் கெடுக்க முயன்ற நாடாளுமன்ற உறுப்பினர் மஹ்மூத் நபாவியன், நாடாளுமன்ற தேசிய பாதுகாப்புக் குழுவில் இருந்து சபாநாயகர் காலிபஃப்பால் அதிரடியாக நீக்கப்பட்டுள்ளார். மறுபுறம், அமெரிக்காவுடனான தற்காலிக போர்நிறுத்தம் உடைந்ததைத் தொடர்ந்து, தீவிர ஆதரவாளர்கள் முழுமையான போரை விரும்புகின்றனர். ஈரானின் முன்னாள் வெளியுறவு அமைச்சர் மனூசெஹ்ர் முத்தகி கூறுகையில், “இப்பகுதியில் உள்ள ஏதேனும் ஒரு அமெரிக்க ராணுவ முகாம் மீது தாக்குதல் நடத்தி, குறைந்தது 100 அமெரிக்க வீரர்களைப் பிணைக் கைதிகளாக ஈரான் கடத்தி வர வேண்டும்” எனத் தீவிரவாத ஆலோசனையை வழங்கியுள்ளார். இதனால் ஈரானில் உள்நாட்டுப் போர் போன்ற சூழல் நிலவி வருகிறது.
