பாகிஸ்தான் அரசியலில் மீண்டும் ஒருமுறை பெரும் அரசியல் புயல் கிளம்பியுள்ளது. சிறையில் அடைக்கப்பட்டுள்ள அந்நாட்டின் முன்னாள் பிரதமர் இம்ரான் கானின் சகோதரி நூரீன் நியாசி விடுத்துள்ள அதிரடி அறிக்கை, பாகிஸ்தான் ராணுவத்தை நேரடியாகக் கூண்டில் நிறுத்தியுள்ளது. கடந்த ஆண்டு இந்தியா நடத்திய ‘ஆபரேஷன் சிந்தூர்’ நடவடிக்கைக்குப் பிறகு, பாகிஸ்தான் ராணுவம் தனது தோல்வியை மறைப்பதற்காக, பொதுமக்கள் மத்தியில் ஒரு போலி வெற்றிக் கதையை ஜோடித்து வருவதாக அவர் பகிரங்கமாகக் குற்றம் சாட்டியுள்ளார். இந்த விவகாரம் பாகிஸ்தான் ஆளும் வர்க்கத்தினரிடையே பெரும் நடுக்கத்தை ஏற்படுத்தியுள்ளதாக அரசியல் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப், பாகிஸ்தான் ராணுவத் தளபதி ஜெனரல் அசிம் முனீர் மற்றும் இஸ்ரேல் ஆகியோரை மையப்படுத்தி நூரீன் நியாசி பல திடுக்கிடும் புகார்களைப் பட்டியலிட்டுள்ளார். இந்தியாவுடனான பதற்றத்தின் போது, அமெரிக்க அதிபர் டிரம்ப் தலையிட்டு பாகிஸ்தானுக்கு தற்காலிக நிவாரணம் பெற்றுத் தந்ததாகக் கூறிய அவர், இதற்குப் பிரதிபலனாக பாகிஸ்தான் ராணுவத் தளபதி அசிம் முனீர், நாட்டை அமெரிக்காவிற்கு அடகு வைத்துவிட்டதாகச் சாடியுள்ளார். மேலும், ‘ஆபிரகாம் உடன்படிக்கையில்’ இணைந்து இஸ்ரேலை ஒரு தனி நாடாக பாகிஸ்தான் அங்கீகரிக்கும் என்ற ரகசிய மூலோபாய வாக்குறுதியையும் அமெரிக்காவிடம் அசிம் முனீர் அளித்துள்ளதாக அவர் குற்றம் சாட்டியுள்ளார்.

இந்திய மற்றும் பாகிஸ்தான் ராணுவத்தின் பலத்தை ஒப்பிட்டுப் பேசிய நூரீன், தொழில்நுட்பம், பொருளாதாரம் மற்றும் பாரம்பரிய ராணுவ பலம் என அனைத்திலும் இந்திய ராணுவம் பாகிஸ்தானை விட பல மடங்கு முன்னிலையில் இருப்பதாக ஒப்புக்கொண்டுள்ளார். கடந்த ‘ஆபரேஷன் சிந்தூர் ‘ தாக்குதலின் போது, இந்தியாவின் பிரம்மோஸ் ஏவுகணைகள் பாகிஸ்தானின் பல ராணுவத் தளங்களை முற்றிலும் தரைமட்டமாக்கின என்றும், வெறும் 88 மணி நேரத்திற்குள் ஒட்டுமொத்த வான்வெளி ஆதிக்கத்தையும் இந்தியா தனது கட்டுப்பாட்டிற்குள் கொண்டு வந்தது என்றும் உளவுத்துறை தரவுகள் காட்டுவதாக அவர் சுட்டிக்காட்டியுள்ளார். இந்த அசாத்தியமான தோல்வியைத் திசைதிருப்பவே ராணுவம் போலிப் பிரச்சாரங்களை மேற்கொண்டு வருகிறது என்பது அவரது குற்றச்சாட்டாகும்.

இப்படியான ஒரு கடுமையான போர்த் தோல்விக்குப் பிறகும், பாகிஸ்தான் ராணுவத் தளபதி ஜெனரல் அசிம் முனீர், தன்னைத்தானே ‘ஃபீல்டு மார்ஷல்’ என்ற உயரிய பதவிக்கு உயர்த்திக் கொண்டது வேடிக்கையானது என எதிர்க்கட்சிகள் விமர்சித்து வருகின்றன. அணு ஆயுத நாடான பாகிஸ்தானால், ஒரு பாரம்பரியப் போரில் இந்தியாவை வீழ்த்த முடியாது என்ற கசப்பான உண்மையை தற்போதைய அதிகார மாற்றம் உணர்த்தியிருப்பதாகக் கூறியுள்ள நூரீன், நாட்டின் மக்களை ஏமாற்றி அமைதிப்படுத்துவதற்காகவே ராணுவத் தலைமை வெற்றிக் கதைகளைத் தயாரித்து வருவதாகக் கூறி தனது உரையை நிறைவு செய்துள்ளார்.