சென்னை நங்கநல்லூர் தில்லை கங்கா நகரைச் சேர்ந்த நாகலட்சுமி (41), பட்டுச் சேலை விற்பனை கடை நடத்தி வந்ததுடன், தனது தொழிலை மேம்படுத்த யூடியூப் மற்றும் இன்ஸ்டாகிராமில் தொடர்ந்து வீடியோக்களை வெளியிட்டு வந்தார். இவரது கணவர் சுப்பிரமணி (51). இவர்களுக்கு இரண்டு மகன்கள் உள்ளனர்.

கடந்த சில ஆண்டுகளாக தம்பதிக்குள் கருத்து வேறுபாடு இருந்து வந்த நிலையில், நேற்று முன்தினம் இரவு மீண்டும் தகராறு ஏற்பட்டுள்ளது. அப்போது நாகலட்சுமியின் நடத்தையில் சந்தேகப்பட்ட சுப்பிரமணி, தொழிலுக்காக வாங்கிய கடன்கள் குறித்தும் வாக்குவாதத்தில் ஈடுபட்டுள்ளார். ஒருகட்டத்தில் ஆத்திரமடைந்த சுப்பிரமணி, நாகலட்சுமியை அறிவாளால் கொடூரமாக வெட்டிக் கொலை செய்தார்.

பின்னர், தானும் மற்றொரு அறையில் தூக்கிட்டுத் தற்கொலை செய்து கொண்டார். கல்லூரியிலிருந்து மாலை வீடு திரும்பிய இளைய மகன் சைலேஷ், தனது தாய் ரத்த வெள்ளத்தில் கிடப்பதையும், தந்தை தூக்கில் தொங்குவதையும் கண்டு அதிர்ச்சியில் உறைந்து போனார். தகவலறிந்து வந்த ஆதம்பாக்கம் போலீசார், இருவரது உடல்களையும் மீட்டு விசாரணை நடத்தி வருகின்றனர்.

ரஷ்யாவில் ஒரு மகனும், சென்னையில் ஒரு மகனும் மருத்துவம் படித்து வரும் நிலையில், பெற்றோரின் இந்த விபரீத முடிவால் அந்த மாணவர்களின் வாழ்க்கை கேள்விக்குறியாகியுள்ளது அப்பகுதி மக்களிடையே பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.