பிரபல வாசனை திரவிய தயாரிப்பு நிறுவனமான ‘டிப்டிக்’ (Diptyque) என்ற பிரெஞ்சு பிராண்ட், கொசுவர்த்தி சுருள் போன்ற வடிவம் கொண்ட சொகுசு ஊதுபத்தி ஒன்றை அறிமுகம் செய்துள்ளது. சர்வதேச அளவில் புகழ்பெற்ற இந்த நிறுவன தயாரிப்பின் ஒரு ஊதுபத்தியின் விலை மட்டும் ₹6,500 ஆக நிர்ணயிக்கப்பட்டுள்ளது. மேலும், இந்த ஊதுபத்தியை வைப்பதற்கான பிரத்யேக ஸ்டாண்ட் ₹17,400-க்கு விற்பனை செய்யப்படுகிறது.
சாதாரணப் பெட்டிக்கடைகளில் மிகக் குறைந்த விலைக்குக் கிடைக்கும் கொசுவர்த்தி சுருள் போன்ற அமைப்பைக் கொண்ட இந்த ஆடம்பரப் பொருளின் ஒட்டுமொத்த விலை ₹23,900-ஐத் தொடுவது நுகர்வோர் மத்தியில் பெரும் வியப்பை ஏற்படுத்தியுள்ளது.
சாதாரண நடுத்தர மக்கள் தங்கள் வீடுகளில் கொசுக்களை விரட்ட பெட்டிக்கடைகளில் ₹10-க்கு வாங்கும் கொசுவர்த்தி சுருள் போன்ற வடிவமைப்பில், இந்த வாசனை ஊதுபத்தி தயாரிக்கப்பட்டுள்ளது. “ஒன்றரை ரூபாய் கொடுத்தால் பெட்டிக்கடையிலேயே கிடைக்கும் ஒரு பொருளுக்கு, இவ்வளவு அதிக விலை நிர்ணயிப்பதா?” என்று சமூக வலைதளங்களில் நெட்டிசன்கள் இந்த பிரெஞ்சு நிறுவனத்தைக் கடுமையாகக் கிண்டல் செய்து விமர்சித்து வருகின்றனர்.
மேலும் ஆடம்பர பிராண்டுகள் என்ற பெயரில் எளிய வடிவமைப்பு கொண்ட பொருட்களுக்குச் சர்வதேச நிறுவனங்கள் பல்லாயிரக்கணக்கில் விலை வைப்பது தற்பொழுது இணையத்தில் பெரும் விவாதப் பொருளாக மாறியுள்ளது.
