சென்னை மற்றும் அதன் புறநகர் பகுதிகளில் இரவு நேரங்களில் ஏற்படும் எதிர்பாராத மின்தடங்கல்களை உடனுக்குடன் சரிசெய்ய, 10 உயர்மட்ட கண்காணிப்பு குழுக்கள் மற்றும் 125 சிறப்பு மின் தடைநீக்க ரோந்து வாகனங்களை மின்சாரத் துறை அமைச்சர் சி.டி.ஆர். நிர்மல் குமார் தொடங்கி வைத்துள்ளார்.

சுமார் 500-க்கும் மேற்பட்ட களப் பணியாளர்கள் மற்றும் பொறியாளர்கள் அடங்கிய இந்தக் குழுக்கள், பெரிய வாகனங்கள் நுழைய முடியாத குறுகிய தெருக்களுக்குச் செல்ல ஆட்டோ வசதிகளுடனும் தயார் நிலையில் இருப்பார்கள்.

மின்தடை ஏற்பட்டால் போர்க்கால அடிப்படையில் நடவடிக்கை எடுக்கவும், இதற்காகத் தேவையான அனைத்து உபகரணங்கள் மற்றும் நிதியை வழங்கவும் அரசு உத்தரவிட்டுள்ளது.

சென்னையின் சில பகுதிகளில் வேண்டுமென்றே மின் பியூஸ்களை அகற்றிச் சதி வேலைகளில் ஈடுபடும் சமூக விரோதிகளால் மின்தடை ஏற்படுவது கண்டறியப்பட்டுள்ளதாகவும், ஆவடி உள்ளிட்ட இடங்களில் இதுபோன்ற செயல்களில் ஈடுபட்டவர்கள் கைது செய்யப்பட்டுள்ளதாகவும் அமைச்சர் தெரிவித்தார்.

தமிழகத்தில் போதிய மின் இருப்பு இருப்பதாகவும், மின்தடை என்பது மின் தட்டுப்பாட்டினால் அல்லாமல் விநியோகக் கட்டமைப்பில் ஏற்படும் தொழில்நுட்பக் கோளாறுகளால் மட்டுமே நிகழ்வதாகவும் அவர் தெளிவுபடுத்தினார். பொதுமக்களின் புகார்களுக்கு ‘மின்னகம்’ மற்றும் சமூக ஊடகங்கள் வாயிலாக உடனடித் தீர்வு காணப்படுவதையும், வெளிப்படைத்தன்மையுடன் தகவல்கள் பகிரப்படுவதையும் அவர் உறுதிப்படுத்தினார்.