தமிழக வெற்றிக் கழகத்தில் (தவெக) தவறு செய்யும் நிர்வாகிகள் மீது உடனடி நடவடிக்கை எடுக்கப்படும் என்பதை நிரூபிக்கும் வகையில் ஒரு அதிரடி சம்பவம் அரங்கேறியுள்ளது. சோழிங்கநல்லூர் மற்றும் ஆலந்தூர் ஆகிய தொகுதிகளில் தவெக நிர்வாகிகள் என்று கூறிக்கொண்டு, சிலர் வியாபாரிகளிடம் கட்டாய மாமூல் வசூலிப்பதாகப் புகார்கள் எழுந்தன. இச்சம்பவத்தை முன்வைத்து திமுக மற்றும் அதிமுகவினர் தவெக-வை கடுமையாக விமர்சித்து வந்தனர்.

​இந்த விவகாரத்தில் அதிரடி காட்டிய தவெக சட்டமன்ற உறுப்பினர் (MLA) ஈசிஆர் சரவணன், ஆலந்தூர் தொகுதியின் வடக்கு பகுதி செயலாளர் பொறுப்பிலிருந்த வேம்புலியை அதிரடியாகப் பதவியிலிருந்து நீக்கம் செய்து அறிவித்துள்ளார். மேலும், இது தொடர்பாகத் தனது எக்ஸ் (X) பக்கத்தில் கடுமையான எச்சரிக்கை வீடியோ ஒன்றையும் அவர் வெளியிட்டுள்ளார்.

கட்சியின் பெயரைக் கெடுக்கும் வகையில் யாரேனும் அராஜகத்திலோ அல்லது மாமூல் வசூலிலோ ஈடுபட்டால், அவர்கள் மீது பாரபட்சமின்றி கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என அந்த வீடியோவில் எச்சரிக்கப்பட்டுள்ளது. தவெக-வின் இந்த உடனடி ஆக்‌ஷன் அரசியல் வட்டாரத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.