ஹரியானா மாநிலத்தில் சினிமா காட்சிகளையும் மிஞ்சும் வகையிலான அதிர்ச்சிகரமான மெகா கொள்ளை சம்பவம் ஒன்று அரங்கேறியுள்ளது. கடந்த மார்ச் மாதத்தில் ஒரு வீட்டில் ரூ.50 லட்சம் ரொக்கம் திருடப்பட்ட நிலையில், அதே வீட்டிற்குள் மீண்டும் புகுந்த முகமூடி அணிந்த கொள்ளையர்கள், இந்த முறை ரூ.3.15 கோடி அளவிலான பெருந்தொகையைக் கொள்ளையடித்துச் சென்றுள்ள சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
சம்பவத்தன்று நள்ளிரவில் அந்த வீட்டிற்குள் புகுந்த முகமூடி அணிந்த மர்ம நபர்கள் சிலர், கைகளில் துப்பாக்கிகளை வைத் கொண்டு வீட்டில் இருந்த குடும்பத்தினரை மிரட்டியுள்ளனர். திடீரென ஆயுதங்களுடன் வந்த நபர்களைக் கண்டு வீட்டில் இருந்தவர்கள் பயத்தில் உறைந்துபோன நிலையில், அந்த முகமூடிக் கும்பல் பேசிய வார்த்தைகள் அவர்களை மேலும் அதிர்ச்சியில் ஆழ்த்தியது.
”கடந்த மார்ச் மாதம் இதே வீட்டில்தான் நாங்கள் புகுந்து ரூ.50 லட்சம் திருடினோம். ஆனால், அப்போது இந்த லாக்கரை எங்களால் திறக்க முடியவில்லை. எனவே, இப்போது உடனே இந்த லாக்கரைத் திறக்க வேண்டும்” என்று துப்பாக்கியைக் காட்டி அந்த குடும்பத்தினரை மிரட்டியுள்ளனர். கொள்ளையர்களின் மிரட்டலுக்குப் பயந்து குடும்பத்தினர் லாக்கரைத் திறந்ததும், அதில் இருந்த ரூ.3.15 கோடியை சுருட்டிக்கொண்டு அந்த கும்பல் தப்பியோடியுள்ளது.
ஒரே வீட்டில் மீண்டும் மீண்டும் அரங்கேறிய இந்தத் துணிச்சலான கொள்ளைச் சம்பவம் குறித்து வழக்குப் பதிவு செய்துள்ள ஹரியானா காவல்துறையினர், தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். ஒரே வீட்டில் அடுத்தடுத்து பல கோடிகள் கொள்ளையடிக்கப்பட்ட இந்தச் சம்பவம் மாநிலம் முழுவதும் பெரும் பரபரப்பையும் அச்சத்தையும் ஏற்படுத்தியுள்ளது.
