தமிழக வெற்றிக் கழகத்தின் ஆட்சிப் பொறுப்பேற்று ஒரு மாதம் நிறைவடைந்துள்ள நிலையில், திமுகவின் தகவல் தொழில்நுட்பப் பிரிவு விஜய் தலைமையிலான தவெக அரசு மீது கடுமையான விமர்சனங்களை முன்வைத்துள்ளது.
கடந்த 31 நாட்களில் தமிழகத்தில் சட்டம்-ஒழுங்கு சீர்குலைந்துள்ளதாகவும், 35-க்கும் மேற்பட்ட படுகொலைகள் மற்றும் பெண்களுக்கு எதிரான கொடூர குற்றங்கள் அதிகரித்துள்ளதாகவும் திமுக குற்றம் சாட்டியுள்ளது.
தவெகவின் நிர்வாகிகள் சிலரே பாலியல் குற்றங்களில் ஈடுபட்டு கைதாகியிருப்பது, அக்கட்சியின் “சிங்கப்பெண் படை” மற்றும் பெண்கள் பாதுகாப்பு குறித்த முழக்கங்களுக்கு முரணாக உள்ளது என்றும், அதிகார மமதையில் அக்கட்சித் தொண்டர்கள் செயல்படுவதாகவும் திமுக தனது எக்ஸ் பக்கத்தில் சாடியுள்ளது.
மின்வெட்டுப் பாதிப்புகள் மற்றும் கட்டுமானப் பொருட்களின் விலை உயர்வால் மக்கள் அவதிப்படும் சூழலில், அரசு நிர்வாகம் சமூக வலைதளங்களில் ‘ரீல்ஸ்’ எடுப்பதற்கே முக்கியத்துவம் அளிப்பதாக விமர்சிக்கப்பட்டுள்ளது.
மாநிலம் சந்திக்கும் இத்தகைய நெருக்கடிகளுக்குத் தீர்வு காண்பதை விடுத்து, அனைத்துத் தோல்விகளுக்கும் முந்தைய ஆட்சியைப் பழிகூறுவதாகவும், முதல்வர் விஜய் இதுநாள் வரை எந்தவொரு பத்திரிகையாளர் சந்திப்பையும் நடத்தாமல் மௌனம் காப்பதாகவும் திமுக விமர்சித்துள்ளது.
மக்கள் முட்டாள்கள் அல்ல என்று எச்சரித்துள்ள திமுக, முதல்வர் விஜய் உடனடியாக மக்கள் மன்றத்திற்குப் பதில் அளிப்பதோடு, சட்டம்-ஒழுங்கைச் சீரமைத்து பொறுப்பான ஆட்சியை வழங்க வேண்டும் என்றும் வலியுறுத்தியுள்ளது.
