பிரவுனி என்றாலே குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைவருக்கும் மிகவும் பிடிக்கும். ஆனால் ஆரோக்கியத்தை நினைத்து பலரும் அதைச் சாப்பிடத் தயங்குவார்கள். மைதா மற்றும் வெள்ளைச் சர்க்கரைக்கு மாற்றாக கேழ்வரகு மாவு, கோகோ பவுடர் மற்றும் சர்க்கரை சேர்த்து செய்யப்படும் இந்த கேழ்வரகு பிரவுனி உடலுக்குத் தேவையான நார்ச்சத்து மற்றும் கால்சியத்தை அதிகளவில் வழங்குகிறது.

இதனைத் செய்ய 2 முட்டை, 1/2 கப் சர்க்கரை மற்றும் 3/4 கப் சன்ப்ளவர் ரீஃபைண்ட் ஆயில் ஆகியவற்றை ஒரு பாத்திரத்தில் சேர்த்து, சர்க்கரை நன்றாகக் கரையும் வரை நன்கு கலக்க வேண்டும். அதனுடன் 1/2 கப் கோகோ பவுடர், 1 டேபிள் ஸ்பூன் வெண்ணிலா எசன்ஸ், 1/4 டேபிள் ஸ்பூன் பேக்கிங் பவுடர், சிறிதளவு உப்பு மற்றும் 1/2 டேபிள் ஸ்பூன் காபித் தூள் ஆகியவற்றைச் சேர்த்து மீண்டும் நன்றாகக் கிளற வேண்டும்.

அடுத்து, இந்த கலவையுடன் 3/4 கப் கேழ்வரகு மாவைச் சேர்த்துக்கட்டிகள் இல்லாமல் மெதுவாகக் கலந்து கொள்ள வேண்டும். இதனுடன் 1/4 கப் பொடியாக நறுக்கிய சாக்லேட் துண்டுகளையும் சேர்த்து நன்றாகக் கலந்தால், சுவையான பிரவுனி செய்வதற்கான மாவு கலவை தயாராகிவிடும்.

இப்போது தயார் செய்த கலவையை, பேக்கிங் ஷீட் விரிக்கப்பட்ட கேக் டின்னில் ஊற்றிச் சமப்படுத்த வேண்டும். பின்னர் 180 டிகிரி வெப்பத்தில் முன்கூட்டியே சூடாக்கப்பட்ட ஓவனில் (Oven) வைத்து 25 முதல் 30 நிமிடங்கள் வரை பேக் செய்து எடுத்தால், வாசனை கமழும் சத்தான கேழ்வரகு பிரவுனி தயாராகிவிடும்.

பேக் செய்து எடுத்த பிரவுனியைச் சூடான சிஸ்லிங் தட்டின் மீது வைத்து துண்டுகளாக்கி, அதன் மேல் 2 ஸ்கூப் ஐஸ்கிரீம் மற்றும் 3 டேபிள் ஸ்பூன் சாக்லேட் சாஸ் ஊற்றிப் பரிமாறினால், கடைகளில் கிடைப்பது போன்ற சுவையான மற்றும் ஆரோக்கியமான கேழ்வரகு பிரவுனியை வீட்டிலேயே சுவைக்கலாம்.