உலகளவில் 70 சதவீதத்திற்கும் அதிகமான மக்களால் பயன்படுத்தப்பட்டு வரும் கூகுள் குரோம்  உலாவியில் இணையவழி மோசடிகள் அதிகரித்து வருகின்றன. பயனர்களை ஏமாற்றி, போலியான வலைத்தளங்கள் மூலம் அவர்களின் கணினிகளில் ஆபத்தான செயலிகளை நிறுவ வைத்து, தனிப்பட்ட நிதி சார்ந்த தகவல்களை ஹேக்கர்கள் திருடி வருவது தெரியவந்துள்ளது.

சமீபத்தில், கூகுள் நிறுவனம் தனது குரோம் செயலியில் உள்ள பல பாதுகாப்பு குறைபாடுகளை கண்டறிந்துள்ளது. பயனர்களின் வங்கி கணக்கு விவரங்கள் மற்றும் தனிப்பட்ட தகவல்கள் ஹேக்கர்களிடம் சிக்காமல் இருக்க, உடனடியாக இந்த குறைபாடுகளைச் சரிசெய்யும் புதிய பாதுகாப்பு அப்டேட்டை  கூகுள் வெளியிட்டுள்ளது.

எனவே, விண்டோஸ், மேக் மற்றும் லினக்ஸ் கணினி பயனர்கள் அனைவரும் தங்களது கூகுள் குரோம் செயலியை உடனடியாக சமீபத்திய பதிப்பிற்கு  புதுப்பித்துக் கொள்ளுமாறு கூகுள் மற்றும் இணைய பாதுகாப்பு நிபுணர்கள் அறிவுறுத்தியுள்ளனர்.

உங்கள் கணினியில் குரோம் செயலியை புதுப்பிக்க, குரோம் பக்கத்தின் வலது மேல் மூலையில் உள்ள மூன்று புள்ளிகளை  கிளிக் செய்ய வேண்டும். அதில் ‘ஹெல்ப்’  என்ற பகுதிக்குச் சென்று, ‘அபௌட் கூகுள் குரோம்’ என்பதைத் தேர்ந்தெடுக்க வேண்டும்.

இதைச் செய்தவுடன் கூகுள் குரோம் தானாகவே புதிய அப்டேட்டைச் சரிபார்த்து பதிவிறக்கம் செய்து கொள்ளும். இதன் மூலம் ஹேக்கர்களின் தாக்குதல்களில் இருந்து உங்கள் கணினியையும் நிதி சார்ந்த முக்கிய விவரங்களையும் பாதுகாப்பாக வைத்துக் கொள்ள முடியும்.