உலகம் முழுவதும் ஆப்பிளின் ஆப் ஸ்டோர் தேடல் முடிவுகளில் இருந்து டெலிகிராம் செயலி திடீரென மறைந்துவிட்டதால், ஐபோன் மற்றும் ஐபேட் பயனர்கள் அதைப் பதிவிறக்கம் செய்ய முடியாமல் தவித்து வருகின்றனர். டெலிகிராமின் அதிகாரப்பூர்வப் பக்கத்தைத் தேடும்போது “பக்கம் காணப்படவில்லை” என்ற பிழைச் செய்தியே வருகிறது. தொழில்நுட்பக் கோளாறு காரணமாக இது நடந்ததா அல்லது கொள்கை மீறல் காரணமாக நீக்கப்பட்டதா என்பது குறித்து ஆப்பிள் அல்லது டெலிகிராம் தரப்பிலிருந்து இதுவரை எந்த அதிகாரப்பூர்வ விளக்கமும் அளிக்கப்படவில்லை.

முன்னதாக 2018-ஆம் ஆண்டிலும், தகுதியற்ற மற்றும் சட்டவிரோத உள்ளடக்கங்கள் பரவியதாகக் கூறி டெலிகிராம் செயலியை ஆப்பிள் தற்காலிகமாக நீக்கியது. பின்னர், பாதுகாப்பு வழிமுறைகளை பலப்படுத்தி, விதிமீறும் கணக்குகளைத் தடை செய்த பிறகே 24 மணி நேரத்திற்குள் அந்தச் செயலி மீண்டும் ஆப் ஸ்டோரில் சேர்க்கப்பட்டது. தற்போது நடந்துள்ள இந்தச் சம்பவமும் பயனர்களிடையே பெரும் குழப்பத்தை ஏற்படுத்தியுள்ளது.

இந்த நீக்கம் ஏற்கனவே டெலிகிராம் வைத்துள்ள பயனர்களை உடனடியாகப் பாதிக்காது என்றாலும், ஆப்பிள் பயனர்களுக்குப் பல சிரமங்களை ஏற்படுத்துகிறது. ஏற்கனவே வைத்திருப்பவர்கள் செயலியைப் பயன்படுத்தலாம்; ஆனால் தவறுதலாக அன்-இன்ஸ்டால் செய்தால் மீண்டும் பதிவிறக்க முடியாது. புதிய ஆப்பிள் சாதனங்களை வாங்குபவர்களாலும் இனி டெலிகிராம் செயலியை நிறுவ முடியாது. மேலும், இந்தப் பிரச்சினை சரியாகும் வரை புதிய அப்டேட்கள் மற்றும் பாதுகாப்பு அம்சங்கள் எதுவும் கிடைக்காது.

அதே நேரத்தில், டெலிகிராமின் இணையப் பதிப்பு, விண்டோஸ், மேக் டெஸ்க்டாப் செயலிகள் மற்றும் ஆண்ட்ராய்டு போன்களில் வழக்கம்போல் டெலிகிராம் தடையின்றி இயங்கி வருகிறது. 1 பில்லியனுக்கும் அதிகமான பயனர்களைக் கொண்ட உலகின் முன்னணி குறுந்தகவல் செயலியான டெலிகிராம் ஆப் ஸ்டோரில் இருந்து திடீரென மாயமானது குறித்துப் பயனர்கள் சமூக வலைத்தளங்களில் தங்கள் ஆதங்கத்தையும் புகார்களையும் தெரிவித்து வருகின்றனர்.