உடல் எடையைக் குறைக்க வேண்டும் என்றாலே பலருக்கும் கடுமையான டயட் மற்றும் பிடித் உணவுகளைத் தவிர்க்கும் எண்ணமே மேலோங்கும். ஆனால், பட்டினி கிடக்காமலேயே நமது அன்றாட பழக்கவழக்கங்களில் சில எளிய மாற்றங்களைச் செய்வதன் மூலம் ஆரோக்கியமான முறையில் எடையைக் கட்டுக்குள் வைக்க முடியும்.

1.குடிநீரின் பயன்பாடு:

காலை எழுந்தவுடன் வெதுவெதுப்பான நீர் அருந்துவது உடலில் தேங்கியுள்ள கொழுப்பைக் குறைக்க உதவும். உணவருந்துவதற்கு அரை மணி நேரத்திற்கு முன்பாக ஒன்று அல்லது இரண்டு டம்ளர் தண்ணீர் குடிப்பதால் செரிமானம் சீராவதுடன், அதிகளவு உணவு உண்பதும் தவிர்க்கப்படும்.

2.கவனத்துடன் உணவருந்துதல்:

தொலைக்காட்சி அல்லது கைபேசியைப் பார்த்தபடி சாப்பிடுவதைத் தவிர்க்க வேண்டும். உணவை நன்றாக மென்று, ரசித்துச் சாப்பிடும்போது மூளைக்கு விரைவில் நிறைவு செய்தி சென்று அடைவதால், நாம் தேவைக்கு அதிகமாகச் சாப்பிடுவது தடுக்கப்படும்.

3.போதுமான உறக்கம்:

தினமும் 7 முதல் 8 மணி நேர ஆழ்ந்த தூக்கம் அவசியமாகும். தூக்கமின்மை ஏற்படும்போது பசியைத் தூண்டும் ஹார்மோன்கள் அதிகமாகி, நொறுக்குத் தீனிகளைச் சாப்பிடத் தூண்டும். மேலும், உணவருந்திய உடனேயே தூங்கச் செல்வதைத் தவிர்க்க வேண்டும்.

4.சிறிய தட்டுகளைப் பயன்படுத்துதல்:

பெரிய தட்டுகளில் சாப்பிடும்போது உணவு குறைவாகத் தெரிந்து மீண்டும் பரிமாறத் தோன்றும். சிறிய தட்டுகளைப் பயன்படுத்தும்போது மனரீதியாகக் குறைவான உணவே போதுமானது என்ற எண்ணம் ஏற்பட்டு கலோரி அளவு இயல்பாகக் குறையும்.

5.சுறுசுறுப்பான வாழ்வியல்:

தினமும் காலையில் உடற்பயிற்சி செய்வது உடலுக்கும் மனதிற்கும் புத்துணர்ச்சி தரும். ஜிம்மிற்குச் செல்லாவிட்டாலும் படிகளையேறுவது, சாப்பிட்ட பின் சிறிது நேரம் நடப்பது போன்ற சிறிய சுறுசுறுப்பான செயல்பாடுகள் மூலமே உடலில் உள்ள கலோரிகளை எளிதாக எரிக்க முடியும்.

கடுமையான டயட் தரும் மாற்றங்கள் தற்காலிகமானவை; ஆனால், இதுபோன்ற ஆரோக்கியமான வாழ்வியல் பழக்கவழக்கங்கள் பக்கவிளைவுகளின்றி எடையை நிரந்தரமாகக் கட்டுக்குள் வைக்க உதவும்.