சமீபத்தில் மகாராஷ்டிரா, குஜராத் போன்ற மாநிலங்களில் ‘அனலாக் பனீர்’ எனப்படும் போலி பனீருக்குத் தடை விதிக்கப்பட்டுள்ளது. நாம் அன்றாடம் உணவில் சேர்த்துக்கொள்ளும் பனீர், சீஸ் மற்றும் வெண்ணெய் போன்றவை உண்மையிலேயே ஆரோக்கியமானவைதானா என்ற கவலையை இந்தச் சம்பவம் மக்கள் மத்தியில் எழுப்பியுள்ளது.

பார்ப்பதற்கு அசல் பனீரைப் போலவே இருக்கும் இந்த அனலாக் பனீர், பாலிலிருந்து தயாரிக்கப்படுவது இல்லை. மாறாகத் தாவர எண்ணெய்கள், வனஸ்பதி, ஸ்டார்ச் மற்றும் ரசாயனங்களைச் சேர்த்தே செயற்கையாகத் தயாரிக்கப்படுகிறது. இதில் அசல் பனீரில் உள்ள கால்சியம், புரதம் போன்றவை இருக்காது. மாறாக, இதயத்தையும் செரிமான மண்டலத்தையும் பாதிக்கும் கெட்ட கொழுப்புகளே அதிக அளவில் நிறைந்துள்ளன.

நாம் வாங்கும் பனீரின் பாக்கெட்டைச் சரிபார்ப்பதன் மூலம் போலி பனீரை ஓரளவு கண்டுபிடிக்கலாம். பாக்கெட்டின் பின்புறம் உள்ள மூலப்பொருட்கள் (Ingredients) பட்டியலில் பால், வினிகர், சிட்ரிக் அமிலம் என்று இல்லாமல் ‘Vegetable Fat’, ‘Vegetable Oil’ அல்லது ‘Analogue’ என்று குறிப்பிடப்பட்டிருந்தால், அது அசல் பனீர் அல்ல என்பதைத் தெரிந்துகொள்ளலாம்.

வீட்டிலேயே சில எளிய சோதனைகள் மூலமும் இதைக் கண்டறியலாம். பனீரை வேகவைத்து அதில் சில துளிகள் அயோடின் கரைசலை ஊற்றும்போது, அது நீல நிறமாக மாறினால் அதில் ஸ்டார்ச் கலக்கப்பட்டுள்ளதாக அர்த்தம். அதேபோல, நெருப்பில் வாட்டும்போது பிளாஸ்டிக் அல்லது ரசாயன நெடி அடித்தாலும், வினிகர் சேர்க்கும்போது எந்த மாற்றமும் இல்லையென்றாலும் அது போலி பனீராக இருக்கலாம்.

அசல் பனீர் சாப்பிடுவதற்கு மிகவும் மென்மையாகவும், லேசான பால் சுவையுடனும் இருக்கும். மாறாக ரப்பர் போல இழுத்துக்கொண்டு, அதிக எண்ணெய்ப் பிசுபிசுப்புடன் இருந்தால் அது அனலாக் பனீராக இருக்க வாய்ப்புள்ளது. எனவே பனீர் வாங்கும் போது கவனமாகச் சரிபார்த்து வாங்குவதே நமது ஆரோக்கியத்திற்கு நல்லது.