புதுடெல்லியில் UAV மற்றும் எதிர் ஆளில்லாத வான்வழி அமைப்புகளை உள்நாட்டு மையமாக்குதல் குறித்து கருத்தரங்கு நடைபெற்றது. இந்த கருத்தரங்கில் தேசிய பாதுகாப்பு படை தலைமை தளபதி ஜெனரல் அனில் சவுகான் கலந்து கொண்டு பேசினார். அவர் பேசியதாவது, “நம்மிடம் தற்போது இருக்கும் ஆயுத அமைப்புகளை கொண்டு எதிர்காலங்களில் வரும் போரை எதிர்கொள்ள முடியாது.

பாகிஸ்தானின் ட்ரோன்கள் மற்றும் ராக்கெட்டுகளால் ஆபரேஷன் சிந்தூர் தாக்குதலின் போது தமக்குப் பெரிதளவில் பாதிப்பில்லை. அவற்றில் சில இயக்கவியல் மற்றும் இயக்கவியல் அல்லாத வழிமுறைகளின் கலவைகளின் மூலம் உருவாக்கப்பட்டிருந்தது. அப்படிபட்ட ட்ரோன்கள் மற்றும் ராக்கெட்கள் தாக்குதலுக்கு பிறகு அப்படியே இருக்கும் நிலையில் மீட்கப்படலாம். எனவே வளர்ந்து வரும் வான் வழி அச்சுறுத்தல்களை தைரியமாக சமாளிக்க வேண்டும் என்றால் இயக்கவியல் மற்றும் இயக்கவியல் அல்லாத எதிர் நடவடிக்கைகளில் நாம் அதித கவனம் செலுத்த வேண்டியது அவசியம்.

அதனால் உள்நாட்டிலேயே நிலப்பரப்பு மற்றும் நமது தேவைகளுக்காக உருவாக்கப்பட்ட UAS, C -UAS ஆகியவை மிகவும் முக்கியமானவை என்று ஆபரேஷன் சிந்துர் மூலம் தெரியவந்தது. இதைத்தொடர்ந்து வெளிநாட்டு தொழில் நுட்பங்களை நாம் சார்ந்திருப்பது நமது தயார் நிலையை பலவீனப்படுத்துவதாக உள்ளது. அதுவே நமது உற்பத்தியை அதிகரிக்கும் திறனை கட்டுப்படுத்தும் நிலைக்கு தள்ளி விடுகிறது.

இந்நிலையில் தொடர்பு இல்லாத போர் முறை தற்போது வேகமாக வளர்ந்து வரும் நிலையில், UAV ஒரு புதிய மாற்றத்தை ஏற்படுத்தும் சக்தியாக உள்ளதால் இந்தியாவிற்கு UAV, C-UAS தொழில்நுட்பங்கள் என்பது மிகவும் அவசியம். மேலும் இந்தியாவின் நலன்களை பாதுகாப்பதற்காகவும் எதிர்கால வாய்ப்புகளை பயன்படுத்திக் கொள்வதற்காகவும் UAV தொழில்நுட்பங்கள் பெரிதளவில் பயன்படும்” என்று கூறினார்.