மத்திய அரசின் கீழ் NCRET செயல்படுகிறது. இதன் பாட புத்தகத்தில் தற்போது புதிதாக இணைக்கப்பட்டுள்ள வரலாற்று பாடம் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. அதாவது முகலாயப் பேரரசர்களான பாபர், அக்பர் மற்றும் அவுரங்கசீப் போன்றவர்கள் கொடூரமான ஆட்சியாளர்கள் என அதில் எழுதப்பட்டுள்ளது. இந்த பாடப்புத்தகம் எட்டாம் வகுப்பு மாணவர்களுக்காக தயாரிக்கப்பட்டதாக கூறப்படுகிறது.

அதாவது எட்டாம் வகுப்பு மாணவர்களுக்காக தயாரிக்கப்பட்ட சமூக அறிவியல் பாடத்தில் டெல்லி சுல்தான்கள், மராட்டியர்கள், முகலாயர்கள் மற்றும் காலனி ஆட்சி காலம் போன்றவைகள் குறித்து விளக்கப்பட்டுள்ளது. இந்த புத்தகத்தில் வரலாற்றின் இருண்ட கால கட்டம் பற்றிய குறிப்பில் ரத்தக் களரி மற்றும் போர் போன்றவைகள் குறித்து குறிப்பிடப்பட்டுள்ளது. அதில் கொடூரமான வன்முறை மற்றும் போர் போன்றவைகள் குறித்து மாணவர்கள் தெரிந்து கொள்ள வேண்டும் எனவும் கடந்த கால வரலாற்று தவறுகளுக்காக தற்போது யாரையும் பொறுப்பாக்க கூடாது எனவும் குறிப்பிடப்பட்டுள்ளது.

இந்நிலையில் அந்தப் பாட புத்தகத்தில் பாபர் கொடூரமான மற்றும் இரக்கமற்ற ஆட்சியாளராக இருந்தார் என்று குறிப்பிடப்பட்டுள்ளது. அவுரங்கசீப் இராணுவ ஆட்சியாளராக இருந்தார் எனவும் குருத்தவார்கள் மற்றும் கோவில்களை அழித்தார் எனவும் குறிப்பிடப்பட்டுள்ளது. அதோடு அக்பர் ஆட்சி காலம் கொடூரமும் சகிப்புத்தன்மையும் கொண்டதாக இருந்ததாகவும் எழுதப்பட்டுள்ளது.

சித்தூர்கர் முற்றுகையின்போது 30000 அப்பாவி மக்களை கொலை செய்ய கொலை செய்ய அக்பர் உத்தரவிட்டதாகவும் அவரது நிர்வாகத்தின் போது உயர் பொறுப்புகளில் முஸ்லிம் அல்லாதவர்கள் குறைந்த அளவிலிருந்ததாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது.

மேலும் அதே நேரத்தில் மராட்டியர்கள், ராஜபுத்திரர்கள், சீக்கியர்கள் மற்றும் அஹோம்கள் ஆகியவைகள் குறித்து உயர்வாக சித்தரிக்கப்பட்டுள்ளதோடு மராட்டிய மன்னர் சத்திரபதி சிவாஜி குறித்து மிகவும் உயர்வாக சொல்லப்பட்டுள்ளது.