மகாராஷ்டிரா மாநிலம் பால்கர் (Palghar) மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் பணிபுரிந்து வரும் பெண் அரசு ஊழியர் ஒருவரை, அவரது சக ஊழியரான நீதிமன்ற உதவியாளர் (பியூன்) நடுரோட்டில் பொதுமக்கள் முன்னிலையில் கதிவாலால் (Sickle) கழுத்து மற்றும் முதுகுப் பகுதியில் 8 முறை கொடூரமாகக் குத்திச் சாய்த்த நெஞ்சை பதறவைக்கும் சிசிடிவி (CCTV) வீடியோ தற்பொழுது வெளியாகி இணையத்தில் பெரும் அதிர்வலையை ஏற்படுத்தியுள்ளது.

பால்கர் மாவட்ட கலெக்டர் அலுவலகத்தின் வருவாய்த்துறையில் சினேகல் சாவந்த் (Snehal Sawant) என்ற பெண் ஊழியர் பணியாற்றி வருகிறார். சம்பவத்தன்று அவர் கோல்ட் சினிமா தியேட்டர் பகுதி அருகே நடந்து சென்று கொண்டிருந்தபோது, அங்கு வந்த நீதிமன்ற ஊழியரான அமோல் முலே (Amol Mule) என்பவர் திடீரெனத் தான் மறைத்து வைத்திருந்த கதிவாலை எடுத்துச் சினேகலை நோக்கி ஓடிவந்து மிகக் கொடூரமாகத் தாக்கத் தொடங்கினார்.

அந்தப் பெண் நிலைதடுமாறி கீழே விழுந்த பிறகும் கூட, கொஞ்சமும் இரக்கமில்லாமல் அடுத்தடுத்து 6 முதல் 8 முறை அவரது கழுத்திலும் முதுகிலும் வெறித்தனமாகக் குத்தியுள்ளார். இந்த பயங்கரத் தாக்குதலால் அந்தப் பகுதி முழுவதும் மக்கள் அலறியடித்து ஓடிய நிலையில், ரத்த வெள்ளத்தில் உயிருக்குப் போராடிய சினேகலை மீட்ட பொதுமக்கள் உடனடியாகப் பால்கர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

ஆனால், அவரது நிலைமை மிகவும் கவலைக்கிடமாக இருந்ததால் மேல் சிகிச்சைக்காகத் தற்பொழுது தனியார் மருத்துவமனைக்கு மாற்றப்பட்டுத் தீவிரக் கண்காணிப்பில் வைக்கப்பட்டுள்ளார். போலீசாரின் முதற்கட்ட விசாரணையில், இவர்களுக்குள் இருந்த தனிப்பட்ட உறவுமுறை மற்றும் காதல் தகராறு காரணமாகவே இந்த விபரீத கொலை முயற்சிச் சம்பவம் அரங்கேறியிருக்கலாம் எனத் தெரியவந்துள்ளது.

தற்பொழுது தலைமறைவாக இருக்கும் குற்றவாளி அமோல் முலேவைத் தேடப் தனிப்படைகள் அமைக்கப்பட்டுள்ள நிலையில், பால்கர் நகரில் நடந்த இந்த கொடூரச் சம்பவத்தின் வீடியோ தற்பொழுது சோசியல் மீடியாவில் அசுர வேகத்தில் ட்ரெண்டாகி வருகிறது.