சியா விதைகள் ஒமேகா-3, நார்ச்சத்து, புரதம் மற்றும் ஆன்டிஆக்ஸிடன்ட்கள் நிறைந்த ஊட்டச்சத்துக்களின் களஞ்சியமாகக் கருதப்படுகின்றன. இவை உடலுக்குப் பல ஆரோக்கிய நன்மைகளைத் தந்தாலும், “அளவுக்கு மிஞ்சினால் அமிர்தமும் நஞ்சு” என்பதற்கு ஏற்ப இவற்றை அதிகமாக உட்கொள்வது கடுமையான உடல்நலப் பிரச்சினைகளை ஏற்படுத்தக்கூடும்.
சியா விதைகளில் நார்ச்சத்து அதிகமாக இருப்பதால், திடீரென அதிகளவில் சாப்பிடும்போது செரிமான அமைப்பால் அவற்றை எளிதில் செரிக்க முடியாது. இதனால் வாயுத்தொல்லை, வயிறு உப்புசம், வயிற்றுப் பிடிப்பு மற்றும் மலச்சிக்கல் போன்ற வயிற்று உபாதைகள் ஏற்படும். மேலும், சியா விதைகள் நீரை அதிக அளவில் உறிஞ்சும் தன்மையுடையதால், இவற்றை ஊறவைக்காமல் உலர்வாகச் சாப்பிட்டால் தொண்டையில் அடைப்பு மற்றும் மூச்சுத்திணறல் ஏற்படும் அபாயம் உண்டு.
உயர் இரத்த அழுத்தம் மற்றும் சர்க்கரை நோய்க்கான மருந்துகளை உட்கொள்பவர்கள் சியா விதைகளை அதிகமாகச் சாப்பிடுவதைத் தவிர்க்க வேண்டும். ஏனெனில், இதில் உள்ள சத்துக்கள் இரத்த அழுத்தத்தையும், இரத்தச் சர்க்கரை அளவையும் அபாயகரமான அளவுக்குத் திடீரெனக் குறைத்துவிடக்கூடும்.
மேலும் சிலருக்கு சியா விதைகளால் ஒவ்வாமை ஏற்பட்டு, தோல் தடிப்புகள், அரிப்பு, வாந்தி அல்லது மூச்சு விடுவதில் சிரமம் போன்ற பக்கவிளைவுகள் தோன்றலாம். எனவே, சியா விதைகளை எப்போதும் தண்ணீரில் நன்கு ஊறவைத்து, சரியான குறைந்த அளவில் உட்கொள்வதே உடலுக்குப் பாதுகாப்பானது.
