வாசனைகளுக்காக நாம் தினமும் பயன்படுத்தும் வாசனைத் திரவியங்கள், நமது ஆரோக்கியத்திற்குத் தீங்கை ஏற்படுத்தக்கூடும் என்று கேம்பிரிட்ஜ் பல்கலைக்கழகத்தின் புற்றுநோய் ஆராய்ச்சியாளர் அனா கனடாஸ் எச்சரித்துள்ளார். குறிப்பாக, கழுத்துப் பகுதியில் நேரடியாக வாசனைத் திரவியங்களைத் தெளிப்பது ஹார்மோன் சமநிலையின்மை மற்றும் கடுமையான சுகாதாரப் பிரச்சினைகளுக்கு வழிவகுக்கும் என்று அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

வாசனைத் திரவியங்களில் பயன்படுத்தப்படும் தாலேட்டுகள்  மற்றும் ஆவியாகும் கரிமச் சேர்மங்கள் ஆகியவை நமது நாளமில்லாச் சுரப்பி மண்டலத்தை பாதிக்கும் தன்மை கொண்டவை. இவை உடலில் உள்ள ஹார்மோன்களின் செயல்பாட்டைத் தடுத்து, பல நச்சுப் பொருட்களை இரத்தத்தில் கலக்கச் செய்கின்றன. இதனால்தான் பல ஆய்வுகள் இவற்றை மலட்டுத்தன்மை, சுவாசப் பிரச்சினைகள் மற்றும் புற்றுநோய் அபாயத்துடன் தொடர்புபடுத்துகின்றன.

கழுத்துப் பகுதியில் வாசனைத் திரவியம் தெளிப்பதைத் தவிர்க்க வேண்டும் என்பதற்கு இரண்டு முக்கியக் காரணங்கள் உள்ளன. முதலாவது, தெளிக்கும் போது உருவாகும் நறுமணத் தெளிப்பான்கள் (Aerosols) நேரடியாகச் சுவாசப் பாதை வழியாக நுரையீரலுக்குச் சென்று பாதிப்பை ஏற்படுத்துகின்றன. இரண்டாவது, கழுத்தின் தோல் மிகவும் மெல்லியதாக இருப்பதால், அங்குள்ள அதிக இரத்த ஓட்டம் காரணமாக இரசாயனங்கள் நேரடியாகவும் மிக விரைவாகவும் இரத்தத்தில் உறிஞ்சப்படுகின்றன.

எனவே, எல்லா வாசனைத் திரவியங்களும் உடனடியாக நோயை ஏற்படுத்தாது என்றாலும், பல ஆண்டுகளாகத் தினமும் கழுத்தில் தெளிக்கும் பழக்கம் ஆபத்தானது. வாசனைத் திரவியங்களைப் பயன்படுத்தும்போது தோலில் நேரடியாகத் தெளிப்பதைத் தவிர்த்து, உடைகள் மீது தெளிப்பது அல்லது பாதுகாப்பான முறையில் பயன்படுத்துவதே உடலுக்கு நன்மையளிக்கும்.