காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி வெளியிட்ட கருத்து ஒன்றைக் கடுமையாக எதிர்த்து, மேற்கு வங்கத்தைச் சேர்ந்த உதவிப் பேராராசிரியர் அர்பிதா சட்டர்ஜி என்பவர் தனது எக்ஸ் தளத்தில் வெளியிட்ட ஒரு பதிவு தற்போது சமூக வலைதளங்களில் பெரும் விவாதப் பொருளாக மாறியுள்ளது.

தான் ஒரு பெருமைமிக்க ‘அந்தபக்த்’ என்றும், ஆங்கிலம் மற்றும் கல்வியியலில் இரண்டு முதுகலை பட்டங்களையும், பி.எட் பட்டத்தையும் பெற்றுள்ளதாகவும், தற்போது முனைவர் பட்டப் படிப்பைத்  தொடர்வதாகவும் அவர் தனது பதிவில் பெருமையுடன் குறிப்பிட்டிருந்தார். ராகுல் காந்தியின் கருத்துக்குச் சவால் விடும் வகையில் அமைந்திருந்த அந்தப் பதிவு, அரசியல் விவாதங்களைத் தாண்டி வேறு ஒரு காரணத்திற்காக வைரலானது.

அதாவது, தான் ஆங்கிலத்தில் உயர் கல்வி பெற்றுள்ளதாகவும் பெரிய பட்டங்களை வைத்திருப்பதாகவும் அந்தப் பெண் கூறிக்கொண்டபோதிலும், அவர் எழுதிய பதிவில் ஏராளமான அடிப்படை ஆங்கில இலக்கணப் பிழைகளும் வாக்கிய அமைப்புக் கோளாறுகளும் நிறைந்திருந்ததை விழிப்புணர்வுள்ள நெட்டிசன்கள் உடனடியாகக் கண்டுபிடித்தனர்.

“having two master’s degree” மற்றும் “pursuing PhD” போன்ற சொற்றொடர்களில் அவர் செய்திருந்த பிழைகளைச் சுட்டிக்காட்டிய சமூக வலைதள பயனாளர்கள், அவரைச் கடுமையாகக் கிண்டல் செய்யத் தொடங்கினர். அரசியல் விவாதத்தைக் கிளப்ப முயன்ற அந்தப் பேராசிரியரின் பதிவு, திடீரென ஒரு இலவச ஆங்கில இலக்கணப் பயிற்சிப் பட்டறையாக மாறியது.

இதனைத் தொடர்ந்து பலரும் அவரது பதிவைச் செப்பனிட்டு, எந்தெந்த இடங்களில் எல்லாம் இலக்கணத் பிழைகள் உள்ளன என்பதைத் துல்லியமாகப் பட்டியலிட்டு இணையத்தில் பகிர்ந்து வந்தனர். ஒரு அரசியல் விமர்சனம் சமூக வலைதளங்களில் எந்த அளவுக்குத் திசைமாறி டிரெண்டாகலாம் என்பதற்கு இந்தச் சம்பவம் மற்றுமொரு அசல் உதாரணமாக அமைந்தது.