முன்னணி ஆன்லைன் வர்த்தக நிறுவனமான ஃபிளிப்கார்ட், வாடிக்கையாளர்களுக்கு நெகிழ்வான கடன் வசதியை வழங்கும் ‘ஃபிளிப்கார்ட் பே லேட்டர்’ என்ற புதிய சேவையை இந்தியாவில் அறிமுகப்படுத்தியுள்ளது. பே-யு ஃபைனான்ஸ்  நிறுவனத்துடன் இணைந்து தொடங்கப்பட்டுள்ள இந்தச் சேவை மூலம், வாடிக்கையாளர்கள் தங்களுக்குத் தேவையான பொருட்களை உடனடியாக வாங்கிவிட்டு, பின்னர் வசதிக்கேற்ப பணத்தைச் செலுத்த முடியும்.

இந்த புதிய சேவையானது ஃபிளிப்கார்ட், மைந்த்ரா மற்றும் ஃபிளிப்கார்ட் மினிட்ஸ்  ஆகிய தளங்களில் கிடைக்கிறது. இதன் மூலம் வாடிக்கையாளர்கள் பொருட்கள் வாங்கும் போது நேரடியாகக் கடன் வசதியைத் தேர்ந்தெடுத்து, தங்களுக்கு விருப்பமான திருப்பிச் செலுத்தும் முறையைத் தேர்வு செய்து கொள்ள முடியும்.

வாடிக்கையாளர்களின் வசதிக்காக இதில் மூன்று விதமான திருப்பிச் செலுத்தும் விருப்பங்கள் வழங்கப்பட்டுள்ளன. முதலாவதாக, ‘பே லேட்டர்’ முறை மூலம் தினமும் வாங்கும் பொருட்களுக்கு 30 நாட்கள் வரை அவகாசம் பெறலாம். இரண்டாவதாக, ‘பே இன் 3’ முறை மூலம் தொகையை மூன்று தவணைகளாகப் பிரித்துச் செலுத்தலாம். மூன்றாவதாக, அதிக மதிப்புள்ள பொருட்களுக்கு 3 முதல் 12 மாதங்கள் வரையிலான EMI தவணை முறையையும் பயன்படுத்திக் கொள்ளலாம்.

ஏற்கனவே யுபிஐ , டெபிட்/கிரெடிட் கார்டுகள், நெட் பேங்கிங் மற்றும் கேஷ் ஆன் டெலிவரி ஆகிய வசதிகளை வழங்கி வரும் ஃளிப்கார்ட், தற்போது இந்த ‘பே லேட்டர்’ சேவையையும் இணைத்துள்ளது. இந்த புதிய அம்சம் வாடிக்கையாளர்களின் ஆன்லைன் ஷாப்பிங் அனுபவத்தை மேலும் எளிமையாகவும் வசதியாகவும் மாற்றும் என எதிர்பார்க்கப்படுகிறது.