அமெரிக்காவில் உள்ள பள்ளிகளில் அடுத்தடுத்து நடைபெறும் துப்பாக்கிச் சூடு மற்றும் தாக்குதல் சம்பவங்கள் அந்நாட்டு அரசுக்கும் பெற்றோர்களுக்கும் பெரும் கவலையை ஏற்படுத்தி வருகின்றன. இத்தகைய ஆபத்தான சூழலில் இருந்து மாணவர்களையும் ஆசிரியர்களையும் பாதுகாப்பதற்காக அமெரிக்கா தற்போது அதிநவீன தொழில்நுட்பத்தை கையில் எடுத்துள்ளது.
அதன்படி, இனி காவலர்களோ அல்லது பாதுகாப்பு அதிகாரிகளோ தேவையின்றி, தாக்குதல் நடத்துபவர்களை நொடியில் வீழ்த்தும் ‘பெப்பர் ஸ்ப்ரே ட்ரோன்கள்’ பள்ளிகளில் பாதுகாப்புப் பணியில் ஈடுபடுத்தப்பட உள்ளன. இந்த ‘பெப்பர் ஸ்ப்ரே ட்ரோன்’ என்பது பள்ளிக் கட்டிடத்திற்குள் ஏதேனும் ஆபத்து அல்லது துப்பாக்கிச் சூடு சம்பவம் நடப்பதாகத் தகவல் கிடைத்தவுடன், தானியங்கி முறையில் உடனடியாகச் செயல்படத் தொடங்கும் ஒரு நவீன கருவியாகும். சம்பவம் நடந்த இடத்திற்கு வெறும் 15 வினாடிகளுக்குள் அதிவேகமாகப் பறந்து செல்லும் திறன் கொண்டது இந்த ட்ரோன்.
இதனால் பாதுகாப்புப் படையினர் வந்து சேருவதற்கு முன்பே, ஆபத்தை எதிர்கொண்டு அசம்பாவிதங்களைத் தடுக்க இது பெருமளவில் உதவுகிறது. சம்பவ இடத்திற்குச் செல்லும் இந்த ட்ரோன், தாக்குதலில் ஈடுபடும் நபரின் முகத்தை நோக்கி நேரடியாகச் சென்று காரமான மிளகுப் பொடி தெளிப்பானை அதிக அழுத்தத்துடன் தெளிக்கும். இதனால் அந்த நபருக்குக் கண்கள் எரிச்சல்டைந்து, பார்வை தற்காலிகமாகப் பாதிக்கப்பட்டு மூச்சுத்திணறல் ஏற்படும்.
இதன் விளைவாக, அவர் கையில் வைத்திருக்கும் ஆயுதத்தைப் பயன்படுத்த முடியாமல் செயலிழந்து போவார். துப்பாக்கி ஏந்திய நபரை மிகக் குறைந்த நேரத்தில் முடக்குவதன் மூலம், பல உயிர்கள் பலியாவதை இந்த ட்ரோன்களால் தடுக்க முடியும். தற்போதைய சூழலில் அமெரிக்கப் பள்ளிகளில் அதிகரித்து வரும் வன்முறைகளைக் கட்டுப்படுத்தவும், பாதுகாப்பை அடுத்த கட்டத்திற்கு எடுத்துச் செல்லவும் இந்த ‘பெப்பர் ஸ்ப்ரே ட்ரோன்’ தொழில்நுட்பம் ஒரு மிக முக்கிய கேடயமாகப் பார்க்கப்படுகிறது.
