மகாராஷ்டிராவில் பொதுமக்களின் உடல்நலனைக் கருத்தில்கொண்டு, தாவர எண்ணெய், ஸ்டார்ச் மற்றும் பல்வேறு செயற்கை வேதிப்பொருட்களைக் கொண்டு தயாரிக்கப்படும் கலப்பட அல்லது போலிப் பன்னீரை  உற்பத்தி செய்வதும் விற்பனை செய்வதும் மாநிலம் முழுவதும் முழுமையாகத் தடை செய்யப்பட்டுள்ளது. உண்மையான பாலுக்குப் பதிலாக மலிவான மூலப்பொருட்களைப் பயன்படுத்தித் தயாரிக்கப்படும் இந்தப் போலிப் பன்னீரில் குறைந்த அளவிலான புரதச்சத்தும், இதயத்திற்குத் கேடு விளைவிக்கும் அதிகப்படியான கொழுப்புகளும் இருப்பதால் பொதுமக்களிடையே கடும் அதிர்ச்சி ஏற்பட்டுள்ளது.

உணவு மற்றும் மருந்து நிர்வாகத்துறை (FDA) நடத்திய ஓராண்டு கால தீவிர கண்காணிப்பு மற்றும் ஆய்வில், சந்தையில் விற்பனை செய்யப்பட்ட மாதிரிகளில் சுமார்ட் 35 சதவீத்திற்கும் அதிகமானவை எவ்வித பாதுகாப்புத் தரமும் இன்றி முறையற்ற வகையில் விற்கப்படுவது அம்பலமாகியுள்ளது. அதுமட்டுமின்றி, பல நட்சத்திர ஹோட்டல்களும் உணவகங்களும் வாடிக்கையாளர்களுக்குத் தெரிவிக்காமலேயே இந்த மலிவான போலிப் பன்னீரைப் பயன்படுத்தி வருவதைக் கண்டறிந்த அதிகாரிகள், இந்தத் தடையை உடனடியாக அமல்படுத்தியுள்ளனர். இத்தகைய விதியை மீறும் வணிகர்களுக்குக் கடுமையான அபராதமும், தேவைப்பட்டால் சிறைத் தண்டனையும் வழங்கப்படும் என அரசு எச்சரித்துள்ளது.

இந்தத் தடையைத் தொடர்ந்து, நுகர்வோர் உண்மையான பன்னீரை எளிதில் அடையாளம் காணும் முறைகளையும் நிபுணர்கள் விளக்கியுள்ளனர். அதன்படி, அசல் பன்னீர் தொடுவதற்கு மென்மையாகச் சற்று உடையும் தன்மையுடன் இருக்கும் என்றும், சமைக்கும் போது மிருதுவாக மாறும் என்றும் குறிப்பிட்டுள்ளனர். மாறாக, ரப்பர் போல இறுகியிருக்கும் தன்மையும், எண்ணெய் பசையான சுவையும் கொண்டிருந்தால் அது போலிப் பன்னீர் என்பதை உறுதி செய்துகொண்டு பொதுமக்கள் எச்சரிக்கையுடன் இருக்க வேண்டும் என்றும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.