ஒரு மனிதனின் வாழ்வில் சில தருணங்கள் வெறும் நினைவுகளாக மட்டும் கடந்து செல்வதில்லை; அவை காலத்தால் அழிக்க முடியாத கல்வெட்டுகளாக மனதின் ஆழத்தில் நிரந்தரமாகப் பதிந்துவிடுகின்றன. உப்புக் காற்றும், ஓயாத அலைகளின் ஓசையும், நீலப் பெருங்கடலும் நமக்கு வேண்டுமானால் சாதாரணமாக இருக்கலாம்.

ஆனால், 80 ஆண்டுகள் இந்தப் பூமியில் வாழ்ந்து, தன் வாழ்நாளில் ஒருமுறைகூட கடலையே பார்த்திராத ஒரு தகப்பனின் கண்களுக்கு அது எப்படித் தெரிந்திருக்கும்? ஒடிசா மாநிலத்தில் உள்ள புகழ் பெற்ற சந்திரபாகா கடற்கரையில் அரங்கேறிய அந்த நெகிழ்ச்சியான சம்பவம்தான், இப்போது இணையத்தின் கண்களைக் குளமாக்கிக் கொண்டிருக்கிறது.

தள்ளாடும் வயதில், தன் தந்தை என்றாவது ஒருநாள் கடலையைப் பார்க்க வேண்டும் என்ற ஆசையை நிறைவேற்ற நினைத்தார் மகன் ஸ்ரீகாந்த். சுருக்கம் விழுந்த தன் தந்தையின் கரம் பிடித்து, மெல்ல மெல்ல மணல்வெளியில் நடந்து சென்று, நீலப் பெருங்கடலின் பிரம்மாண்டத்தை அவர் கண்முன் விரித்துக் காட்டினார். அந்த நொடிகள்… வார்த்தைகளால் விவரிக்க முடியாதவை! 80 வயது முதியவரின் முகத்தில் ஒரு சிறு குழந்தைக்குரிய ஆச்சரியமும், ஆனந்தமும் ஒரே நேரத்தில் ததும்பியது. பிறந்த குழந்தைக்கு உலகைக் காட்டும் தகப்பனைப் பார்த்திருக்கிறோம்; ஆனால், முதிர்ந்த தகப்பனுக்கு ஒரு புதிய உலகைக் காட்டும் மகனின் இந்தச் செயல் காண்போர் நெஞ்சை நெகிழச் செய்கிறது.

கடலருகே சென்ற அந்த முதியவர் செய்த செயல், அங்கிருந்தவர்களை மட்டுமின்றி, இன்று இந்த வீடியோவைப் பார்க்கும் பல லட்சக்கணக்கானோரின் இதயங்களையும் உருக வைத்துள்ளது. அலைகள் வந்து கால்களைத் தழுவும்போது, சாதாரணமாக நாம் அதனுள் இறங்கி விளையாடத் தொடங்குவோம். ஆனால், அந்த முதியவர் தனது கால்களால் அந்த நீரை மிதிக்காமல், மெல்ல குனிந்து தன் கைகளால் கடலன்னையைத் தொட்டு, தன் கண்களில் ஒற்றிக் கொண்டு பயபக்தியோடு வணங்கினார். இயற்கையைத் தெய்வமாக மதிக்கும் அந்தத் தூய்மையான செயல், ஒரு மனிதனின் ஆழமான பண்பாட்டையும், முதிர்ச்சியையும் எந்த ஆரவாரமுமின்றி உலகுக்கு உணர்த்திவிட்டது.

இந்த விலைமதிப்பற்ற தருணத்தைப் பதிவு செய்த மகன் ஸ்ரீகாந்த், “இது எனது வாழ்க்கையின் பொன்னான தருணம். 80 வயதில் என் தந்தையின் முகத்தில் மலர்ந்த இந்தச் சிரிப்பைக் காண்பதே என் வாழ்வின் மிகப்பெரிய பொக்கிஷம்” என்று நெகிழ்ச்சியோடு குறிப்பிட்டுள்ளார். இன்ஸ்டாகிராமில் பகிரப்பட்ட இந்த வீடியோ, குறுகிய காலத்திலேயே 45 லட்சத்திற்கும் அதிகமான பார்வைகளைக் கடந்து, எல்லைகளைத் தாண்டி அனைவரின் இதயங்களையும் வென்று வருகிறது.

வீடியோவின் கீழே குவிந்துள்ள கருத்துகள் ஒவ்வொன்றும் கவிதைகளாகப் பூத்துள்ளன. ஒரு பயனர், “கடல் கூட இன்று ஆனந்தக் கண்ணீர் வடித்திருக்கும்… ஏனென்றால், முதல்முறையாக ஒரு மனிதர் தன்னை காலால் மிதிக்காமல், கைகளால் தொட்டு வணங்கி மரியாதை செலுத்தியுள்ளார்” என்று உணர்ச்சிப்பொங்கப் பதிவிட்டுள்ளார். “இயற்கை அன்னையைத் தெய்வமாக எப்படி மதிக்க வேண்டும் என்பதை அந்த முதியவரின் செயல் உலகிற்கே பாடம் நடத்திவிட்டது” என மற்றொருவர் புகழ்ந்துள்ளார்.

 

View this post on Instagram

 

A post shared by Bhukkhad Musafir | Shrikant & Noopur ❤️ (@bhukkhad_musafir)

“>

உலகம் முழுவதிலுமிருந்து கொட்டும் இந்த அன்பான வார்த்தைகளை, தன் தந்தைக்குப் படித்துக் காண்பித்து அவரையும் ஆனந்தக் கடலில் ஆழ்த்திக் கொண்டிருக்கிறார் மகன் ஸ்ரீகாந்த். முதிர்ந்த வயதில் பெற்றோரை பாரமாக நினைக்கும் பலருக்கு மத்தியில், தன் தந்தையின் சிறு ஆசையை நிறைவேற்றி, அவர் முகத்தில் மலர்ந்த புன்னகையைத் தன் வாழ்வின் பொக்கிஷமாகக் கொண்டாடும் ஸ்ரீகாந்தின் இந்தச் செயல்… அந்த அலைகளை விட அழகானது, அந்தப் பெருங்கடலை விட ஆழமானது!