“என் கள்ளக்காதலுக்கு இடையூறா இருந்தான், அதான் என் கைக் குழந்தைக்கு பூச்சிக்கொல்லி மருந்து வச்சுக் கொன்னேன்!” என்று அக்கம் பக்கத்தினர் யாரும் சந்தேகப்படக் கூடாது என்பதற்காக வலிப்பு வந்து குழந்தை இறந்துவிட்டதாக நாடகமாடிவிட்டு, தனது கள்ளக்காதலனுடன் ஓட்டம் பிடித்த லலிதா (23) என்ற பெண்ணை போலீசார் நேற்று முன்தினம்  அதிரடியாகக் கைது செய்துள்ளனர்.

சேலம் மாவட்டத்தைச் சேர்ந்த விவசாயி திருமலைவாசனின் மனைவியான லலிதா, குடும்பத்தகராறு காரணமாகத் தனது ஒன்றரை வயதுக் குழந்தையுடன் தாயார் வீட்டில் வசித்து வந்த நிலையில், கடந்த ஏப்ரல் 11-ஆம் தேதி குழந்தைக்கு உடல்நலக்குறைவு ஏற்பட்டதாகக் கூறி அரசு மருத்துவமனைக்குக் கொண்டு சென்றுள்ளார்.

அங்கு குழந்தை ஏற்கனவே இறந்துவிட்டதாக மருத்துவர்கள் தெரிவித்த நிலையில், குழந்தையின் மரணத்தில் சந்தேகம் இருப்பதாகப் போலீசார் வழக்குப் பதிவு செய்த உடனே லலிதா திடீரென தலைமறைவானார்.

இதற்கிடையே, பிரேத பரிசோதனை அறிக்கையில் குழந்தையின் உடலில் கொடூரமான விஷம் கலந்திருப்பது உறுதியானதைத் தொடர்ந்து, தீவிர விசாரணையில் இறங்கிய போலீசார் 10 நாட்களாகத் தலைமறைவாக இருந்த லலிதாவைப் பிடித்து விசாரித்த போது, தனக்கும் ஆனந்தன் என்பவருக்கும் இருந்த கள்ளக்காதலுக்கு இடையூறாக இருந்ததால் பெற்ற மகனையே விஷம் வச்சுக் கொன்றதாகப் போலீசாரிடம் பகீர் வாக்குமூலம் அளித்துள்ளார்.