“அவசரமா பேசணும்னு கூப்பிட்டான்.. ஆனா இப்படி ஒரு கொடூரமான வலையை விரிப்பான்னு நான் கொஞ்சம் கூட எதிர்பார்க்கலை!” என்று சிவகங்கை மாவட்ட அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் பாதிக்கப்பட்ட 30 வயது பெண் போலீஸ் கண்ணீருடன் கொடுத்த வாக்குமூலம் காவல்துறை வட்டாரத்தில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

சிவகங்கை ஆயுதப்படை போலீஸ் பிரிவில் பணியாற்றி வரும் திருமணமான அந்த பெண் போலீசிடம், மானாமதுரை அருகே உள்ள தூதை கிராமத்தைச் சேர்ந்த லாரி டிரைவரான ராபின் (28) என்பவர் நண்பராகப் பழகி வந்துள்ளார்.

சம்பவத்தன்று பெண் போலீசை போனில் தொடர்பு கொண்ட ராபின், “உங்களை அவசரமாகச் சந்திக்க வேண்டும்” என்று கூறி சிவகங்கை திருப்பத்தூர் சாலைப் பகுதியில் உள்ள ஒரு ஆள்நடமாட்டம் இல்லாத இடத்திற்கு வரவழைத்துள்ளார்.

அதை நம்பி அங்கு சென்ற பெண் போலீசிடம் நைசாகப் பேசி, புதர் சூழ்ந்த பகுதிக்கு அழைத்துச் சென்று திடீரென பாலியல் தொல்லை கொடுக்கத் தொடங்கியுள்ளான்.

இதற்கிடையே, லாரன்ஸ் மற்றும் அவரது கூட்டாளிகளான சித்தாலங்குடியைச் சேர்ந்த மகாராஜா (29), ஹரிஸ் (21) ஆகிய இருவரையும் ராபின் திட்டமிட்டு முன்பே அந்த இடத்திற்கு வரவழைத்திருந்ததாகக் கூறப்படுகிறது.

அங்கு வந்த 3 காம மிருகங்களும் சேர்ந்து பெண் போலீசை வளைத்துப்போட்டு கொடூரமாகப் பாலியல் தொல்லை கொடுத்து அராஜகத்தில் ஈடுபட்டுள்ளனர். இதனால் நிலைகுலைந்து போன பெண் போலீஸ், அவர்களிடம் இருந்து தப்பிக்கப் போராடி சத்தமாக அலறியுள்ளார். பின்னர் அங்கிருந்து எப்படியோ தப்பியோடி அருகில் இருந்த வீடுகளில் தஞ்சம் புகுந்து உதவி கேட்டுள்ளார்.

பொதுமக்கள் அந்த 3 பேரையும் மடக்க முயன்றபோது அவர்கள் தப்பியோடிவிட்டனர். உடனடியாக 100 என்ற போலீஸ் கட்டுப்பாட்டு அறைக்குத் தகவல் பறக்க, சம்பவ இடத்திற்கு விரைந்த ரோந்து போலீஸார் பெண் போலீசை மீட்டனர்.

சிவகங்கை மாவட்ட எஸ்பி சிவப்பிரசாத் இந்த விவகாரத்தில் அதிரடி ஆக்ஷன் எடுக்க உத்தரவிட்டார். இதன்பேரில் துணை சூப்பிரண்டு அமலஅட்வின் மற்றும் அனைத்து மகளிர் போலீஸ் நிலைய இன்ஸ்பெக்டர் மாரீஸ்வரி ஆகியோர் தனிப்படை அமைத்து தீவிர தேடுதல் வேட்டையில் இறங்கினர்.

பெண் போலீசை ஆசை வார்த்தை கூறி வரவழைத்த லாரி டிரைவர் ராபின், அவனது கூட்டாளிகள் மகாராஜா, ஹரிஸ் ஆகிய 3 பேரையும் சில மணி நேரங்களிலேயே போலீஸார் சுற்றி வளைத்து அதிரடியாகக் கைது செய்து சிறையில் அடைத்தனர்.

தமிழ்நாட்டில் சட்டம் ஒழுங்கைக் காக்கும் பெண் போலீசுக்கே, அதுவும் ஆள்நடமாட்டம் இல்லாத இடத்திற்கு வரவழைத்து கூட்டுப் பாலியல் அத்துமீறல் நடத்தப்பட்ட இந்த பகீர் சம்பவம் ஒட்டுமொத்த தமிழகத்தையும் உலுக்கியுள்ளது.