அமெரிக்கா மற்றும் ஈரான் நாடுகளுக்கு இடையே கடந்த 3 மாதங்களுக்கும் மேலாக நீடித்து வந்த போரை முடிவுக்குக் கொண்டு வரும் வரலாற்றுச் சிறப்புமிக்க அமைதி ஒப்பந்தம் கையெழுத்தாகியுள்ளது. பிரான்சில் நடைபெற்ற ஜி-7 உச்சி மாநாட்டிற்குப் பிறகு, வெர்செய்ல்ஸ் அரண்மனையில் பிரெஞ்சு அதிபர் இம்மானுவேல் மேக்ரானுடன் இரவு விருந்து சாப்பிட்டுவிட்டு வெளியேறிய அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப், இந்த ஒப்பந்தத்தின் நகலில் அதிகாரப்பூர்வமாகக் கையெழுத்திட்டு, “இது எளிதானதாக இருக்கவில்லை, ஒப்பந்தம் கையெழுத்தாகிவிட்டது” என்று உறுதிப்படுத்தினார்.
இதேபோல், ஈரானின் தலைநகர் தெஹ்ரானில் அந்நாட்டு அதிபர் மசூத் பெசெஷ்கியான் இந்த உடன்படிக்கையில் கையெழுத்திட்டதாக ஈரானிய அரசு செய்தி நிறுவனமான ‘இர்னா’ தெரிவித்துள்ளது. சுவிட்சர்லாந்தில் வெள்ளிக்கிழமை (ஜூன் 19) நடைபெறவிருந்த முறையான கையெழுத்து விழா ரத்து செய்யப்பட்டு, இரு நாட்டு அதிபர்களும் வெவ்வேறு இடங்களில் இருந்து டிஜிட்டல் முறையில் கையெழுத்திட்டதைத் தொடர்ந்து, இந்த ஒப்பந்தம் உடனடியாக அமலுக்கு வந்துள்ளதாக அதிகாரிகள் அறிவித்துள்ளனர்.
“It’s signed.”
President Trump told reporters he signed the Iran memorandum of understanding in Versailles as he departed the palace following a dinner with French President Emmanuel Macron.
A White House official says a photo of the signed agreement was sent to Iran and the… pic.twitter.com/HVELS6RYVB
— Fox News (@FoxNews) June 17, 2026
இந்த அமைதி ஒப்பந்தத்தின் முக்கிய அம்சமாக, இரு நாடுகளுக்கும் இடையேயான போர் நிறுத்தப்பட்டு, போருக்கு முந்தைய இயல்பு நிலை மீண்டும் செய்யப்படவுள்ளது. இதன் மூலம், உலகளவில் கடுமையான எரிசக்தி நெருக்கடியை ஏற்படுத்தியிருந்த, மிக முக்கிய கடல் வழித்தடமான ‘ஹார்முஸ் ஜலசந்தி’ மீண்டும் திறக்கப்பட்டு, ஈரான் தனது கச்சா எண்ணெயை சர்வதேச சந்தையில் சுதந்திரமாக விற்க உடனடியாக அனுமதி வழங்கப்பட்டுள்ளது.
மேலும், இந்த ஒப்பந்தத்தின் கீழ் ஈரான் தனது செறிவூட்டப்பட்ட யுரேனியம்இருப்பைக் குறைக்க ஒப்புக்கொண்டுள்ளதுடன், அதன் அணுசக்தி திட்டம் குறித்த பேச்சுவார்த்தைகளை அமெரிக்காவுடன் மீண்டும் தொடங்கவுள்ளது. இதற்குப் பதிலாக, ஈரான் மீது அமெரிக்கா விதித்திருந்த பொருளாதாரத் தடைகள் அனைத்தும் நீக்கப்படும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த வரலாற்றுச் சிறப்புமிக்க ஒப்பந்தம் கையெழுத்தானபோது அமெரிக்க வெளியுறவு அமைச்சர் மார்கோ ரூபியோ மற்றும் பிரெஞ்சு அதிபர் மேக்ரான் ஆகியோர் உடனிருந்தனர்.
