ஹாலிவுட் திரையுலகின் மிக பயங்கரமான திகில் திரைப்படமாக கருதப்படும் ‘தி ரிங்’ (The Ring) படத்தில் ‘சமாரா மார்கன்’ என்ற பேய் பாத்திரத்தில் நடித்து உலகளவில் பிரபலமான அமெரிக்க நடிகை டேவி சேஸ் (Daveigh Chase) தனது 35-வது வயதில் காலமானார். அவரது காதலரான ராய் ஹெர்னாண்டஸ் இந்த துயரமான செய்தியை ஊடகங்களுடன் பகிர்ந்துள்ளார். டேவி சேஸ் கடந்த செவ்வாய்க்கிழமை அன்று காலமானதாக ராய் ஹெர்னாண்டஸ் டிஎம்இசட் (TMZ) ஊடகத்திடம் தெரிவித்துள்ளார். அவர் கடந்த சில காலமாக ‘மெனிஞ்சைட்டிஸ்’ (Meningitis – மூளைக்காய்ச்சல்) என்ற கடுமையான நோயால் பாதிக்கப்பட்டு அவதிப்பட்டு வந்ததாகவும், அதன் தொற்று காரணமாக உடல்நிலை மிகவும் மோசமடைந்ததால் அவரது உயிர் பிரிந்தது என்றும் விபரங்கள் வெளியாகியுள்ளன.
டேவி சேஸ் ஹாலிவுட்டில் முற்றிலும் மாறுபட்ட இரண்டு கதாபாத்திரங்களுக்காக எப்போதும் நினைவு கூரப்படுவார். ஒருபுறம், டிஸ்னியின் புகழ்பெற்ற அனிமேஷன் திரைப்படமான ‘லிலோ அண்ட் ஸ்டிட்ச்’ (Lilo & Stitch) படத்தில் ‘லிலோ’ என்ற குட்டிப் பெண்ணின் கதாபாத்திரத்திற்கு தனது அழகான குரல் மூலம் அனைவரின் இதயங்களையும் வென்றிருந்தார். மறுபுறம், ‘தி ரிங்’ திரைப்படத்தில் 7 நாட்களுக்குள் உயிரைப் பறிக்கும் சமாரா மார்கன் என்ற ஆவியின் திகிலூட்டும் பாத்திரத்தில் நடித்து பார்ப்பவர்களை நடுங்க வைத்தார். இரண்டு வெவ்வேறான உச்சகட்ட கதாபாத்திரங்களில் நடித்து முத்திரை பதித்த இந்த இளம் நடிகையின் திடீர் மறைவு ஹாலிவுட் திரையுலகினர் மற்றும் ரசிகர்கள் மத்தியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
