மகாராஷ்டிர அரசியலில் பெரும் அரசியல் புயலைக் கிளப்பும் வகையில், உத்தவ் தாக்கரே தலைமையிலான சிவசேனா கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர்களை விலைக்கு வாங்க பெரும் குதிரை பேரம் (Poaching) நடப்பதாக அக்கட்சியின் மூத்த தலைவரும் எம்பியுமான சஞ்சய் ராவத் பகிரங்கமாகக் குற்றம் சாட்டியுள்ளார். தங்களது கட்சியின் ஒன்பது மக்களவை உறுப்பினர்களில் ஆறு பேரைத் தங்கள் பக்கம் இழுக்க, தலா ரூ.15 கோடி முன்பணமும் , தனி விமானம் உள்ளிட்ட சொகுசு வசதிகளும் ஆஃபர் செய்யப்பட்டுள்ளதாக அவர் அதிரடி புகார் தெரிவித்துள்ளார். “மொத்தம் ரூ.50 முதல் 60 கோடி வரை பேரம் பேசப்பட்டுள்ளது; புனே, நாக்பூர், நாந்தேடு ஆகிய நகரங்களில் இருந்து முன்பணம் பெற்ற எம்பிக்களை டெல்லிக்கு அழைத்துச் செல்ல தனி விமானங்கள் பயன்படுத்தப்பட்டுள்ளன; இதற்கான புகைப்பட ஆதாரங்கள் எங்களிடம் உள்ளன” என்று சஞ்சய் ராவத் ஆவேசமாகத் தெரிவித்துள்ளார்.
சிவசேனா கட்சியின் 60-வது ஆண்டு நிறுவன தினம் கொண்டாடப்பட உள்ள நிலையில், கட்சியை உடைக்க ‘ஆபரேஷன் டைகர்’ என்ற பெயரில் சதி நடப்பதாகக் கூறியுள்ள சஞ்சய் ராவத், “உத்தவ் தாக்கரேவும் எங்களது தொண்டர்களும் ரத்தம் சிந்தி உழைத்ததால் தான் அவர்கள் எம்பியாக முடிந்தது; பணத்திற்கு ஆசைப்பட்டு கட்சி மாற நினைப்பவர்கள் தைரியமிருந்தால் தங்கள் எம்பி பதவியை ராஜினாமா செய்துவிட்டு, மீண்டும் மக்களிடம் வாக்குக் கேட்டுப் போட்டியிடட்டும்” என சவால் விடுத்துள்ளார். மேலும், கட்சித் தாவலைத் தடுக்க சிவசேனா தலைமை அவசரமாக எம்பிக்களுக்கு ‘கொறடா உத்தரவு’ பிறப்பித்துள்ளதுடன், நாடாளுமன்ற சபாநாயகர் ஓம் பிர்லாவையும் நேரில் சந்தித்து முறையிட்டுள்ளது. தேசிய அளவில் பெரும் உலுக்கலை ஏற்படுத்தியுள்ள இந்த விவகாரத்தால் மகாராஷ்டிர அரசியல் களம் தற்பொழுது உச்சக்கட்ட பரபரப்பில் தத்தளித்து வருகிறது.
