அமெரிக்காவின் புளோரிடா மாகாணத்தில் உள்ள மியாமி நகருக்கு அருகே காடுகளில் தங்களது ஆதிக்கத்தைச் செலுத்தி வந்த 177 ராட்சத பர்மிய மலைப்பாம்புகளையும், அவற்றின் 4,100 முட்டைகளையும் விஞ்ஞானிகள் வேட்டையாடிப் பிடித்துள்ள விசித்திரச் சம்பவம் ஒட்டுமொத்த உலகையும்அதிர வைத்துப் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

கடந்த 2025 நவம்பர் முதல் 2026 ஏப்ரல் வரையிலான இடைப்பட்ட காலக்கட்டத்தில், புளோரிடாவில் ஆண்டுதோறும் நடக்கும் ‘பைத்தான் சேலஞ்ச்’ போட்டிக்கு முன்னதாகவே விஞ்ஞானிகள் இந்த இமாலய சாதனையைப் படைத்துள்ளனர். மொத்தம் 3,600 கிலோ எடையுள்ள இந்த மலைப்பாம்புகள் உண்மையில் அமெரிக்காவின் பூர்வீக உயிரினங்கள் அல்ல; கடந்த 1970-களில் ஆசியாவில் இருந்து பொழுதுபோக்கிற்காகக் கொண்டு வரப்பட்டு, பின்னர் காடுகளில் சட்டவிரோதமாக விடப்பட்டவை ஆகும்.

அங்கு இவற்றுக்குப் போட்டியாக வேறு எந்த வேட்டை விலங்குகளும் இல்லாததாலும், சாதகமான தட்பவெப்ப நிலை இருந்ததாலும், இவற்றின் எண்ணிக்கை தற்போது 1 முதல் 3 லட்சம் வரை பெருகி, அங்குள்ள மான் போன்ற உள்ளூர் உயிரினங்களை வேட்டையாடிச் சாப்பிட்டு ஒட்டுமொத்த சுற்றுச்சூழலையும் காலி செய்து வந்தன.

இதைக் கட்டுப்படுத்த மாபெரும் திட்டம் தீட்டிய விஞ்ஞானிகள், ரேடியோ டேக் (Radio Tag) பொருத்தப்பட்ட 40 ஆண் பாம்புகளைக் காடுகளுக்குள் அனுப்பி, அவை இணச்சேர்க்கைக்காகச் சென்ற இடத்தை மோப்பம் பிடித்து, அங்கு பதுங்கியிருந்த பிரம்மாண்ட பெண் பாம்புகளைக் கூண்டோடு வேட்டையாடினர்.

இந்த மெகா ஆபரேஷனில் பிடிபட்ட ஒரு ராட்சத பெண் பாம்பு மட்டும் சுமார் 17 அடி நீளமும், 70 கிலோ எடையும் கொண்டது என்பதுடன், இந்த அதிரடி நடவடிக்கையால் சுமார் 4,100 முட்டைகள் காடுகளில் பொரித்து குட்டிகளாக மாறுவதற்கு முன்பே வெற்றிகரமாக அழிக்கப்பட்டுப் புளோரிடா காடுகள் காப்பாற்றப்பட்டுள்ளதாக நெட்டிசன்கள் இந்த வீடியோவைப் பகிர்ந்து பாராட்டி வருகின்றனர்.