வாரணாசியில் உள்ள ஒரு ஹோம்ஸ்டேயில் முகர்ஜி குடும்பத்தைச் சேர்ந்த கணவன், மனைவி மற்றும் அவர்களது மகன் என 3 பேர் உயிரிழந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. ஆகஸ்ட் 9 மற்றும் 10-ம் தேதிகளில் இந்த உயிரிழப்புகள் நடந்ததாக கூறப்படுகிறது. கடன் மற்றும் உடல்நலப் பிரச்சினைகளால் அந்த குடும்பம் சிரமங்களை சந்தித்து வந்ததாக தகவல் வெளியாகியுள்ளது.

இந்த சம்பவத்தைவிட வேதனை அளிக்கும் வகையில், முகர்ஜி குடும்பத்தினரின் இறுதிச்சடங்கில் உறவினர்கள் யாரும் பங்கேற்கவில்லை என கூறப்படுகிறது. போலீசார் உறவினர்களை தொடர்புகொண்டு தகவல் தெரிவித்தபோதும், அவர்கள் வாரணாசிக்கு வர மறுத்ததாக தகவல் வெளியாகியுள்ளது. இதனால் இறுதிச்சடங்கு உறவினர்கள் இன்றி நடைபெற்றுள்ளது.

முகர்ஜி குடும்பம் முதலில் பிரயாக்ராஜைச் சேர்ந்தது. அங்கு வசிக்கும் உறவினர்கள் சிலரை போலீசார் தொடர்புகொண்டுள்ளனர். குறிப்பாக உயிரிழந்தவரின் சகோதரி மற்றும் அவரது கணவரிடமும் போலீசார் பேசியுள்ளனர். அப்போது, உயிரிழந்த தனது சகோதரருடனும் அவரது மனைவியுடனும் சுமார் 12 ஆண்டுகளுக்கு முன்பே குடும்ப உறவு முறிந்துவிட்டதாக அவரது சகோதரி போலீசாரிடம் தெரிவித்ததாக கூறப்படுகிறது.

முகர்ஜி குடும்பத்தில் சில உறவினர்கள் பேராசிரியர்களாகவும், அரசு அதிகாரிகளாகவும் இருப்பதாக கூறப்படுகிறது. இருப்பினும், இறுதிச்சடங்கில் யாரும் கலந்துகொள்ள முன்வரவில்லை. ஒரே குடும்பத்தைச் சேர்ந்த மூன்று பேரின் இறுதி பயணத்தில் உறவுகளின் வருகையே இல்லாமல் போன சம்பவம், வாரணாசியில் பெரும் சோகத்தையும் அதிர்ச்சியையும் ஏற்படுத்தியுள்ளது.