நாடுகளும் கலாச்சாரங்களும் வெவ்வேறாக இருந்தாலும், மனித மனங்களை இணைக்கும் அன்பிற்கும் பாசத்திற்கும் எல்லைகள் கிடையாது என்பதை நிரூபிக்கும் ஒரு நெகிழ்ச்சியான வீடியோ தற்போது சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது. அமெரிக்காவிலிருந்து இந்தியா திரும்பிய இந்தியத் தம்பதியினருக்கு, அவர்களின் அமெரிக்க பக்கத்துக்கு வீட்டுக்காரர் கண்ணீருடன் விடைபெற்ற சம்பவம் நெட்டிசன்களின் இதயங்களை உருக்கியுள்ளது.
அமெரிக்காவில் வசித்து வந்த இந்தியத் தம்பதியினர் தங்களது குடித்தனத்தை முடித்துக்கொண்டு மீண்டும் இந்தியா திரும்புவதற்கான ஏற்பாடுகளைச் செய்தனர். அப்போது, அவர்களுக்கு மிக நெருக்கமான அமெரிக்கப் பெண்மணி, அவர்களை வழியனுப்பி வைக்க வந்துள்ளார்.
An emotional farewell unfolded as an American grandmother broke down while her Indian neighbours prepared to return to India after years of living next door. Having developed a close bond and become like family over the years, the neighbours shared an emotional goodbye before… pic.twitter.com/l54aOSUTsA
— The Sentinel (@Sentinel_Assam) August 14, 2026
விஜய் கொக்கேரகட்டா என்பவரால் இன்ஸ்டாகிராமில் பகிரப்பட்ட இந்த வீடியோவில், அந்தப் பெண் தம்பதியினரை நெருங்கி வந்து கட்டியணைக்கும் காட்சி இடம்பெற்றுள்ளது. ஆரம்பத்தில் சாதாரணமாகத் தொடங்கும் அந்தப் பிரியாவிடை, சிறிது நேரத்திலேயே அந்தப் பெண்மணி தன் கண்ணீரைக் கட்டுப்படுத்த முடியாமல் அவர்களின் தோளில் சாய்ந்து அழுது அடம்பிடிக்கும் அளவுக்கு உணர்ச்சிவசமாக மாறியது.
“நான் உங்களை மிகவும் மிஸ் பண்ணுவேன்” என்று அவர் தழுதழுத்த குரலில் கூறியதுடன், அந்தத் தம்பதியினரைப் பிரிய மனமில்லாமல் நீண்ட நேரம் கட்டியணைத்தபடி நின்றார். உணர்ச்சி பெருக்கெடுத்த அந்தத் தருணத்தில், தம்பதியினரும் அவரைப் புன்னகையுடன் அரவணைத்துச் சமாதானப்படுத்த முயன்றனர். இந்தச் பிரியாவிடை நிகழ்வின் போது தாங்கள் கேமராவில் பதிவு செய்யப்படுவதை அந்தத் தம்பதியினர் துளியும் அறிந்திருக்கவில்லை. அவர்களின் நண்பர் ஒருவர் இந்த உணர்ச்சிகரமான தருணத்தைத் தனது தொலைபேசியில் ரகசியமாகப் பதிவு செய்துள்ளார்.
பின்னர் இந்த வீடியோவை அந்தத் தம்பதியிடம் அவர் வழங்கியுள்ளார். விமான நிலையத்திற்குச் செல்வதற்கு முன்பு அவர்கள் கழித்த அந்த இறுதி நிமிடங்களின் தூய அன்பு, தற்போது அவர்களுக்கு வாழ்நாள் முழுவதும் நினைவில் நிற்கும் பொக்கிஷமாக மாறியுள்ளது.
வேறு நாடுகளுக்குக் குடிபெயரும் பலரும் தாங்கள் பழகிய நல்ல அக்கம் பக்கத்தினரையும் நண்பர்களையும் பிரிந்து செல்வதை நினைத்து ஏங்குவதுண்டு. இந்த வீடியோவை பார்த்த பலரும் தங்களது சொந்த அனுபவங்களை இணையத்தில் பகிர்ந்து வருகின்றனர். “அமெரிக்காவில் இதுபோன்ற அன்பான நண்பர்களைப் பெற்றது எனக்குக் கிடைத்த வரம்” என்றும், “நாங்கள் பிரேசிலில் இருந்து மாறியபோதும் இதே போன்றதொரு வலியை அனுபவித்தோம்” என்றும் பலரும் கமெண்ட் செய்து வருகின்றனர்.
எந்தவிதமான ஆடம்பரமும் இல்லாமல், அன்றாட வாழ்க்கையில் உருவான தூய்மையான நட்பின் வெளிப்பாடாக அமைந்த இந்தப் பிரியாவிடை, தூரங்கள் எவ்வளவாக இருந்தாலும் உண்மையான அன்பு என்றைக்கும் பிரியாது என்பதை உலகிற்கு உணர்த்தியுள்ளது.
