மின்சார கட்டணத்தை குறைக்கவும், சுற்றுச்சூழலை பாதுகாக்கவும் தற்போது பலரும் சூரிய சக்தி மூலம் மின்சாரம் தயாரிக்கும் சோலார் பேனல்களை பயன்படுத்தி வருகின்றனர். வீடுகள், கடைகள், அலுவலகங்கள் என பல இடங்களில் சோலார் பேனல்கள் பொருத்தப்பட்டு வருகின்றன. இதனால் சோலார் தொடர்பான பல்வேறு சுவாரஸ்யமான வீடியோக்களும் அவ்வப்போது சமூக வலைதளங்களில் வைரலாகி வருகின்றன.

அந்த வகையில், தற்போது வெளியாகியுள்ள ஒரு வீடியோ இணையத்தில் பலரது கவனத்தையும் ஈர்த்துள்ளது. அந்த வீடியோவில், இரவு நேரத்தில் ஒருவர் தனது வீட்டின் முன்பாக நின்று கையில் வைத்திருக்கும் டார்ச் லைட்டை சோலார் பேனல் மீது நேராக ஒளிரச் செய்கிறார். இதைப் பார்க்கும்போது, டார்ச் வெளிச்சத்தை வைத்து சோலார் பேனலை சார்ஜ் செய்ய முயற்சிப்பது போல் தெரிகிறது.

 

சில விநாடிகள் அவர் தொடர்ந்து சோலார் பேனல் மீது வெளிச்சம் பாய்ச்சுகிறார். இந்த காட்சிதான் தற்போது சமூக வலைதளங்களில் பேசுபொருளாக மாறியுள்ளது. சிலர் இதை வித்தியாசமான யோசனை என்று கூறி ரசித்து வருகின்றனர். அதே நேரத்தில், பலர் இது அறிவியல் ரீதியாக சாத்தியமில்லை என்றும், வெறும் பொழுதுபோக்குக்காக உருவாக்கப்பட்ட வீடியோவாக இருக்கலாம் என்றும் கருத்து தெரிவித்து வருகின்றனர்.

வீடியோ வைரலானதை தொடர்ந்து, அதன் கருத்துப் பகுதியில் ஏராளமான நகைச்சுவையான பதிவுகள் குவிந்து வருகின்றன. “இது என்ன புதிய சார்ஜிங் முறை?” என்றும், “புத்திசாலித்தனம் அதிகமாகிவிட்டது, அறிவியலும் யோசிக்க வேண்டிய நிலை” என்றும் சிலர் கிண்டலாக பதிவிட்டுள்ளனர். சிலர் இதை பார்த்து சிரித்தாலும், சோலார் தொழில்நுட்பம் குறித்த விவாதத்தையும் இந்த வீடியோ ஏற்படுத்தியுள்ளது.