உத்தரகாண்ட் மாநிலம் ஹரித்வாரில் காவடி யாத்திரையின் போது கங்கை ஆற்றின் வேகமான நீரோட்டத்தில் சிக்கிய நொய்டாவைச் சேர்ந்த சிவபக்தர் ஒருவரை, SDRF காவலர் தனது உயிரை பணயம் வைத்து காப்பாற்றிய சம்பவம் பெரும் பாராட்டுகளை பெற்றுள்ளது. இந்த மீட்பு காட்சியின் வீடியோ தற்போது சமூக வலைதளங்களில் வேகமாக பரவி வருகிறது.

ஒவ்வொரு ஆண்டும் சாவன் மாதத்தில் லட்சக்கணக்கான பக்தர்கள் கங்கை நீரை எடுத்துச் செல்லவும், புனித நீராடவும் ஹரித்வாருக்கு வருகின்றனர். இதனால் கங்கை கரைகளில் அதிகமான கூட்டம் காணப்படும். குறிப்பாக ஆற்றின் வேகமான நீரோட்டம் காரணமாக விபத்துகள் ஏற்படும் அபாயம் இருப்பதால், போலீசார் மற்றும் மாநில பேரிடர் மீட்புப் படை வீரர்கள் தொடர்ந்து கண்காணிப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.

 

இந்நிலையில், காங்க்ரா பகுதியில் பணியில் இருந்த SDRF காவலர் நிதேஷ் கேத்வால், கங்கை நீரில் அடித்துச் செல்லப்பட்டு போராடிக் கொண்டிருந்த இளைஞரை கவனித்தார். நிலைமையின் தீவிரத்தை உணர்ந்த அவர், எந்த தயக்கமும் இல்லாமல் உடனடியாக ஆற்றில் குதித்தார். கடும் நீரோட்டத்துக்கு மத்தியில் போராடி அந்த இளைஞரை அடைந்த அவர், பத்திரமாக கரைக்கு அழைத்து வந்தார்.

மீட்கப்பட்டவர் உத்தரப் பிரதேச மாநிலம் நொய்டாவைச் சேர்ந்த சிவபக்தர் என்பது தெரியவந்துள்ளது. கங்கை நீரில் குளித்துக் கொண்டிருந்தபோது எதிர்பாராதவிதமாக அவரது சமநிலை தவறி நீரோட்டத்தில் சிக்கியதாக கூறப்படுகிறது. SDRF வீரரின் உடனடி நடவடிக்கையால் பெரும் விபத்து தவிர்க்கப்பட்டது. இந்த சம்பவத்தின் வீடியோ வெளியானதைத் தொடர்ந்து, நிதேஷ் கேத்வாலின் துணிச்சலை பாராட்டி சமூக வலைதளங்களில் ஏராளமானோர் கருத்துகளை பதிவிட்டு வருகின்றனர்.