டெல்லியில் உள்ள தனது இல்லத்தில் செய்தியாளர்களைச் சந்தித்துப் பேட்டி அளித்துக் கொண்டிருந்த பூர்ணியா தொகுதி சுயேச்சை நாடாளுமன்ற உறுப்பினர் பப்பு யாதவ் மீது திடீரென நபர் ஒருவர் தாக்குதல் நடத்த முயன்ற சம்பவம் அரசியல் வட்டாரத்தில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

பிரஸ் மீட் நடைபெற்றுக் கொண்டிருந்த அந்தத் தருணத்தில், அங்கிருந்த கூட்டத்திற்குள் புகுந்த அடையாளம் தெரியாத மர்ம நபர் ஒருவர் மறைத்து வைத்திருந்த கத்தியைக் காட்டி அவரைத் தாக்க முயன்றதாகக் கூறப்படும் சம்பவம் பெரும் பரபரப்பை உண்டாக்கியது.

எனினும், அங்கு பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டிருந்த காவலர்களும், உடனிருந்த அவரது கட்சித் தொண்டர்களும் துரிதமாகச் செயல்பட்டு அந்த நபரைச் சுதாரித்து மடக்கிப் பிடித்தனர். தப்பியோட முயன்ற அந்த நபரை அங்கேயே வைத்து க்கிய தொண்டர்கள், பின்னர் அவரைப் போலீசாரிடம் ஒப்படைத்தனர். விசாரணையில், பிடிபட்ட நபர் புலந்தஷாரைச் சேர்ந்த சுமித் (34) என்பதும், சாமியார்கள் மற்றும் துறவிகள் அவமதிக்கப்பட்ட விவகாரத்தில் அவர் மீது ஏற்பட்ட கடும் கோபமே இந்தத் தாக்குதலுக்குக் காரணம் என்பதும் தெரியவந்துள்ளது.

சமீபத்தில் நாடாளுமன்ற வளாகத்தில் நடைபெற்ற விசித்திரமான போராட்டமும், அதைத் தொடர்ந்து உத்திரப்பிரதேசத்தின் வாரணாசி உள்ளிட்ட பகுதிகளில் அவர் மீதும் எதிர்க்கட்சித் தலைவர்கள் மீதும் பதியப்பட்ட வழக்குகளும் இந்தத் தாக்குதலுக்குப் பின்னணியாக இருக்கலாம் என்று பேசப்படுகிறது. இந்தச் சம்பவத்தைத் தொடர்ந்து செய்தியாளர்களிடம் பேசிய பப்பு யாதவ், தன்னை அழிக்கப் பல சதித்தி தீட்டப்பட்டாலும், மக்களின் உரிமைகளுக்காகவும் உண்மையை நிலைநாட்டவும் தான் எந்தத் தியாகத்திற்கும் தயார் என்றும் எத்தகைய மிரட்டல்களுக்கும் பயப்படப் போவதில்லை என்றும் திட்டவட்டமாகத் தெரிவித்துள்ளார்.