பெரும்பாலன பெண்களுக்கு கன்னங்கள், மேல் உதடு மற்றும் தாடைப் பகுதிகளில் ஆண்களைப் போல முடி வளர்வது இயல்பான ஒன்றுதான். இது உடலின் ஹார்மோன் மாற்றங்களால் ஏற்பட்டாலும், பல பெண்களின் தன்னம்பிக்கையைக் குறைப்பதாக அமைகிறது. இதற்காகச் சந்தையில் கிடைக்கும் கிரீம்கள் மற்றும் கெமிக்கல் சிகிச்சைகளைப் பயன்படுத்தினாலும் நிரந்தரத் தீர்வு கிடைப்பதில்லை. ஆனால், நம் வீட்டிலிருக்கும் இயற்கை பொருட்களைக் கொண்டே இந்த முடிகளைப் பாதுகாப்பாக அகற்ற முடியும்.
சருமத்தில் உள்ள இறந்த செல்கள் மற்றும் தேவையில்லாத முடிகளை அகற்றுவதில் தேன் மற்றும் சர்க்கரை கலவை சிறப்பாகச் செயல்படுகிறது. ஒரு ஸ்பூன் தேனுடன், இரண்டு ஸ்பூன் சர்க்கரை மற்றும் சிறிதளவு தண்ணீர் சேர்த்துச் சர்க்கரை கரையும் வரை கொதிக்க வைக்க வேண்டும். இந்த கலவை ஆறியவுடன் முடி இருக்கும் இடத்தில் தடவி, சிறிது நேரம் கழித்து உரித்து எடுத்தால் முடி வளர்ச்சி படிப்படியாகக் குறையும். அதேபோல், இரண்டு ஸ்பூன் கடலை மாவுடன் இரண்டு ஸ்பூன் ரோஸ் வாட்டர் கலந்து பேஸ்ட் போலத் தடவி வந்தாலும் முடி வளர்ச்சி கட்டுப்படும்.
முட்டை மற்றும் சோளமாவு கலவையும் முகத்தில் உள்ள முடிகளை அகற்ற நல்ல பலன் தரும். முட்டையின் வெள்ளைக் கருவுடன் சிறிதளவு சோளமாவு மற்றும் சர்க்கரை சேர்த்து நன்றாகக் கலந்து முகத்தில் ‘மாஸ்க்’ போல அப்ளை செய்ய வேண்டும். இது நன்கு காய்ந்த பிறகு குளிர்ந்த நீரால் கழுவி வந்தால் முடிகள் சுலபமாக நீங்கிவிடும்.
அதேபோல் பப்பாளி பழத் தோலை நீக்கிச் சிறு துண்டுகளாக நறுக்கி, அதனுடன் ஒரு ஸ்பூன் மஞ்சள் தூள் சேர்த்து அரைத்துக் கொள்ள வேண்டும். இந்த பேஸ்ட்டை முகத்தில் தடவி 20 நிமிடங்கள் கழித்துக் கழுவி வரலாம். இதனைத் தொடர்ந்து செய்து வரும்போது முகத்தில் உள்ள தேவையில்லாத முடிகள் முழுமையாக நீங்குவதோடு, சருமம் இயற்கையாகவே பளபளப்பாகவும் மாறும்.
