இந்திய ரயில்களில் பிச்சை கேட்டு இரண்டு மணி நேரத்தில் ரூ.6,200 சம்பாதித்ததாக இரண்டு இளைஞர்கள் வெளியிட்ட வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. இந்த வீடியோ தற்போது இணையத்தில் பெரும் விவாதத்தை ஏற்படுத்தியுள்ளது. சிலர் இந்த தொகையை பார்த்து ஆச்சரியம் தெரிவித்துள்ள நிலையில், பலர் இது உண்மையா அல்லது பார்வையாளர்களை கவர்வதற்காக உருவாக்கப்பட்ட வீடியோவா என கேள்வி எழுப்பி வருகின்றனர்.
வைரல் வீடியோவில், இரண்டு இளைஞர்கள் ரயிலில் சாதாரணமாக பிச்சை கேட்பது போன்று பயணிகளிடம் பணம் கேட்டுள்ளனர். உதவி செய்யுமாறு கேட்டபோது பயணிகள் பணம் வழங்கியதாகவும், தொடர்ந்து இரண்டு மணி நேரத்தில் இருவரும் சேர்ந்து ரூ.6,200 வரை பெற்றதாகவும் அவர்கள் கூறியுள்ளனர். இதன் அடிப்படையில், ஒருவர் தினமும் இரண்டு மணி நேரம் இதுபோல் செய்தால் மாதம் ரூ.1.9 லட்சம் வரை சம்பாதிக்க முடியும் என்றும் வீடியோவில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த வீடியோவில், ஒரு இளைஞர் மாற்றுத்திறனாளி போன்று நடித்து, காலை நொண்டியபடி நடந்து சென்று பணம் கேட்டதாகவும் காட்டப்பட்டுள்ளது. மற்றொரு இளைஞரும் பயணிகளிடம் உதவி கேட்டுள்ளார். இரண்டு மணி நேரம் கழித்து அவர்கள் பெற்ற பணத்தை எண்ணியபோது, ரூ.6,200 கிடைத்ததாக கூறி அதை வீடியோவில் பதிவு செய்துள்ளனர்.
View this post on Instagram
ஆனால் இந்தக் கூற்றின் உண்மைத் தன்மை குறித்து தெளிவான ஆதாரங்கள் வெளியாகவில்லை. அதிக தேவையில் இருப்பவர்கள் அல்லது மாற்றுத்திறனாளிகள் போன்று தோன்றுபவர்களுக்கு மக்கள் அதிகமாக உதவி செய்வார்கள் என்றும், இந்த ஒரு வீடியோவை வைத்து பொதுவான முடிவுக்கு வர முடியாது என்றும் கூறப்படுகிறது. சிலர் இதை சமூக பரிசோதனை என பாராட்டிய நிலையில், பலர் இது திட்டமிட்டு உருவாக்கப்பட்ட வீடியோவாக இருக்கலாம் என சந்தேகம் தெரிவித்துள்ளனர். சமூக வலைதளங்களில் வெளியாகும் இதுபோன்ற தகவல்களை உண்மை என நம்புவதற்கு முன்பு அதன் நம்பகத்தன்மையை சரிபார்க்க வேண்டும் என்பதே பலரின் கருத்தாக உள்ளது.
