பெங்களூருவின் உத்தரஹள்ளி பகுதியில் வசித்து வந்த 13 வயது சிறுவர் ஒருவர் கடந்த ஜூலை 27-ஆம் தேதி முதல் மாயமாகியிருப்பது அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. ஏழாம் வகுப்பு படித்து வந்த அந்த மாணவன், வீட்டை விட்டு சைக்கிளில் வெளியேறிய பிறகு இதுவரை வீடு திரும்பவில்லை. பல இடங்களில் தேடியும் எந்தத் தகவலும் கிடைக்காததால், பெற்றோர் போலீசில் புகார் அளித்துள்ளனர். இதையடுத்து காவல்துறையினர் தீவிரமாக தேடுதல் பணியில் ஈடுபட்டுள்ளனர்.
இந்தச் சிறுவனுக்கு மீன் வளர்ப்பதில் அதிக ஆர்வம் இருந்ததாக கூறப்படுகிறது. சில வாரங்களுக்கு முன்பும் வீட்டிற்கு மீன்களை வாங்கி வந்தபோது, தேவையில்லாமல் பணத்தை செலவிட வேண்டாம் என்று தந்தை எச்சரித்திருந்தார். அப்போது ஏற்பட்ட மனவருத்தத்தில் சிறுவர் வீட்டை விட்டு வெளியேறிய நிலையில், குடும்பத்தினர் அவரை தேடி மீண்டும் வீட்டிற்கு அழைத்து வந்து சமாதானப்படுத்தியதாக தகவல் வெளியாகியுள்ளது.
இந்நிலையில், ஜூலை 27-ஆம் தேதி பள்ளி முடிந்து வீடு திரும்பிய சிறுவர் மீண்டும் மீன்களை வாங்கி வந்துள்ளார். இதைப் பார்த்த தந்தை கடும் கோபமடைந்து அவரைக் கண்டித்ததுடன் அடித்ததாகவும், பின்னர் டியூஷனுக்கு செல்லுமாறு கூறிவிட்டு வேலைக்குச் சென்றதாகவும் கூறப்படுகிறது. இந்தச் சம்பவம் சிறுவனை மிகவும் மனவேதனைக்கு உள்ளாக்கியதாக சொல்லப்படுகிறது.
மாலை சுமார் 5 மணியளவில் சைக்கிளில் வீட்டை விட்டு வெளியேறிய அந்தச் சிறுவர், இரவு நேரமாகியும் வீடு திரும்பாததால் குடும்பத்தினர் பதற்றமடைந்தனர். உறவினர்கள், நண்பர்கள், பள்ளி உள்ளிட்ட பல இடங்களில் தேடியும் எந்தத் தகவலும் கிடைக்காததால், தாய் காவல் நிலையத்தில் புகார் அளித்தார். இதையடுத்து மாயமான சிறுவரை கண்டுபிடிக்க காவல்துறையினர் பல்வேறு கோணங்களில் விசாரணை நடத்தி, தீவிர தேடுதல் நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
