டெல்லி ஜந்தர் மந்தரில் கடந்த ஜூலை 23-ஆம் தேதி நடைபெற்ற போராட்டத்தின் போது பிரதமர் நரேந்திர மோடி குறித்து அவதூறான வார்த்தைகளைப் பயன்படுத்தியதாக கூறப்படும் சிறுமி தொடர்பான வீடியோ ஒன்று சமூக வலைதளங்களில் பரவி வருகிறது. அந்த வீடியோவில், சிறுமி கைகளை கூப்பியபடி மன்னிப்பு கேட்பது போன்ற காட்சிகள் இடம்பெற்றுள்ளன.
அந்த வீடியோவில், தான் 15 வயது சிறுமி எனவும், நண்பர்களுடன் கன்னாட் பிளேஸ் சென்ற பின்னர் போராட்டத்திற்கு சென்றதாகவும் அவர் கூறுகிறார். போராட்டத்தில் இருந்த கூட்டத்தினர் எழுப்பிய கோஷங்களின் தாக்கத்தால் தான் உணர்ச்சிவசப்பட்டு அந்த வார்த்தைகளை கூறியதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.
“அங்கிருந்தவர்களின் தாக்கத்தால் நான் அவ்வாறு பேசிவிட்டேன். நான் செய்தது மன்னிக்க முடியாத தவறு என்பதை உணர்கிறேன். பல தவறான வார்த்தைகளை பயன்படுத்திவிட்டேன். இதற்காக நாட்டு மக்களிடம் மன்னிப்பு கேட்டுக்கொள்கிறேன்” என அந்த வீடியோவில் சிறுமி கூறியதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும், “இது எனது முதல் மற்றும் கடைசி தவறு. நான் மிகவும் வருத்தப்படுகிறேன். என்னையே பார்க்க முடியாத அளவுக்கு வெட்கப்படுகிறேன். தயவு செய்து என்னை மன்னிக்கவும்” என அவர் கூறியுள்ளார். எனினும், இந்த மன்னிப்பு வீடியோவின் உண்மைத் தன்மை மற்றும் அதன் பின்னணி குறித்து அதிகாரப்பூர்வமாக உறுதி செய்யப்படவில்லை.
