நவீன கால ஒர்க்கிங் கலாச்சாரத்தில், வார நாட்களில் ஓயாமல் உழைத்துத் தள்ளும் பலரும் தங்களுக்குக் கிடைக்கும் விடுமுறை நாள்களிலும் எதையாவது சாதித்துவிட வேண்டும் அல்லது பயணங்கள் செல்ல வேண்டும் என்ற அழுத்தத்திலேயே காலத்தைக் கழிக்கின்றனர்.
அவ்வாறு விடுமுறையில் எதையாவது பயனுள்ளதாகச் செய்யாமல் வெறும் பொழுதைக்கழித்தால், தங்களை அறியாமலேயே ஒருவித குற்ற உணர்ச்சி பற்றிக்கொள்ளும். இந்தச் சிந்தனை முறையை மாற்ற வேண்டும் என்று வாதிட்டுள்ள பெங்களூரைச் சேர்ந்த தன்யா அரோரா என்ற பெண், இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பகிர்ந்துள்ள கருத்துகள் தற்போது இணையத்தில் பெரும் விவாதத்தை ஏற்படுத்தியுள்ளன.
View this post on Instagram
மன அழுத்தத்தாலும் சோர்வூட்டும் பணிகளாலும் மனதளவில் பாதிக்கப்பட்டுள்ள ஒருவருக்கு, விடுமுறை நாளில் எந்தவித திட்டமும் இல்லாமல் படுக்கையில் ஓய்வெடுப்பது மட்டுமே உண்மையான தேவையாக இருக்க முடியும் என்று அவர் சுட்டிக்காட்டியுள்ளார். விடுமுறையைச் சுறுசுறுப்பாகக் கழிக்கவில்லை என்றால் அந்த நாள் வீணாகிவிட்டது என்று அர்த்தமல்ல என்றும், எவ்வித பொறுப்புகளும் இல்லாமல் சும்மா இருப்பதும் உடலுக்கும் மனதுக்கும் அவசியமானது என்றும் அவர் கூறியுள்ளார். அடுத்த நாள் அலுவலகத்தில் “விடுமுறையில் என்ன செய்தீர்கள்?” என்று யாராவது கேட்டால், தயக்கமின்றி “எதுவும் செய்யவில்லை” என்று நேராகக் கூறலாம் என்றும் அவர் நகைச்சுவையுடன் குறிப்பிட்டுள்ளார்.
தன்னுடைய இந்த வித்தியாசமான மற்றும் யதார்த்தமான சிந்தனையின் மூலம் பல தொழில்முறை ஊழியர்களின் மனக்குறையைப் பிரதிபலித்துள்ள தன்யா அராோவின் கருத்தை ஆயிரக்கணக்கான நெட்டிசன்கள் ஆமோதித்து வருத்து வருகின்றனர். “சில நாட்களுக்குத் தூங்குவதைத் தவிர வேறு எந்த வேலையும் எனக்குத் தேவையில்லை” என்றும், “ஒன்று அல்லது இரண்டு நாள்கள் போதாது, எனக்கு ஒரு மாத விடுப்பு வேண்டும்” என்றும் பலரும் தங்களது கருத்துகளைப் பகிர்ந்து வருகின்றனர். ஓயாத உழைப்புச் சூழலில் தவிக்கும் மக்களுக்கு இந்த வைரல் பதிவு ஒரு சிறிய மன ஆறுதலைத் தந்துள்ளதாகச் சமூக வலைதளங்களில் பேசப்பட்டு வருகிறது.
