பிரதமரின் முத்ரா யோஜனா (Pradhan Mantri Mudra Yojana – PMMY) என்பது சிறு, குறு மற்றும் நடுத்தர தொழில் தொடங்க விரும்புபவர்களுக்கும், தொழில் செய்பவர்களுக்கும் பிணையம் எதுவும் இன்றி கடன் வழங்கும் மத்திய அரசின் மிக முக்கியமான திட்டமாகும். 2015-ஆம் ஆண்டு தொடங்கப்பட்ட இத்திட்டம், உற்பத்தி, வியாபாரம், சேவைகள் மற்றும் விவசாயம் சார்ந்த உப தொழில்கள் (ஆடு/மாடு வளர்ப்பு, கோழிப் பண்ணை போன்றவை) செய்யும் வங்கி அல்லாத சிறு தொழிலாளர்களுக்கு நிதியுதவி அளிப்பதை முதன்மை நோக்கமாக்கக் கொண்டுள்ளது.

இத்திட்டத்தின் கீழ் தொழிலின் வளர்ச்சி நிலை மற்றும் தேவைக்கு ஏற்ப கடன்கள் மூன்று பிரிவுகளாகப் பிரிக்கப்பட்டு வழங்கப்படுகின்றன. முதல் கட்டமாக ‘சிசு’ (Shishu) பிரிவில் ₹50,000 வரை கடன் வழங்கப்படுகிறது. இரண்டாவது கட்டமாக தொழிலை விரிவாக்கம் செய்ய ‘கிஷோர்’ (Kishor) பிரிவில் ₹50,000 முதல் ₹5 லட்சம் வரையிலும், மூன்றாவது கட்டமான ‘தருண்’ (Tarun) பிரிவில் ₹5 லட்சம் முதல் ₹10 லட்சம் வரையிலும் கடன் பெற முடியும். மேலும், தகுதியுடைய நபர்களுக்கு முத்ரா கடனின் அதிகபட்ச வரம்பு ₹20 லட்சமாக உயர்த்தப்பட்டுள்ளது.

முத்ரா கடனின் மிக முக்கிய அம்சமே இதில் சொத்து பிணையமோ அல்லது ஜாமீனோ தேவையில்லை என்பதாகும். அரசு அல்லது தனியார் வங்கிகள், மண்டல கிராமப்புற வங்கிகள், சிறு நிதி வங்கிகள்  மற்றும் வங்கி அல்லாத நிதி நிறுவனங்கள் மூலம் இக்கடனைப் பெறலாம். கடன் பெற விரும்புபவர் எந்தவொரு வங்கியிலும் நிலுவையில் உள்ள கடனைத் திருப்பிச் செலுத்தாமல்  இருக்கக் கூடாது. வட்டி விகிதத்தைப் பொறுத்தவரை நிலையான விகிதம் என்று இல்லாமல், கடன் வழங்கும் வங்கிகளின் விதிகள் மற்றும் ரிசர்வ் வங்கியின் வழிகாட்டுதலின்படி நிர்ணயிக்கப்படுகிறது.

இக்கடனுக்கு விண்ணப்பிக்க அடையாளச் சான்று (ஆதார், வாக்காளர் அட்டை, பான் கார்டு), முகவரிச் சான்று, தொழில் தொடங்குவதற்கான ஆதாரங்கள், கடந்த சில மாதங்களின் வங்கி கணக்கு அறிக்கை  மற்றும் திட்ட விவரக் குறிப்பு ஆகிய ஆவணங்கள் அவசியமாகும். தகுதியுள்ள நபர்கள் தங்களுக்கு அருகில் உள்ள பொதுத்துறை அல்லது தனியார் வங்க அணுகியோ அல்லது அரசின் ‘ஜன்சமர்த்’  இணையதளம் மூலமாகவோ ஆன்லைனில் நேரடியாக விண்ணப்பித்து இத்திட்டத்தின் பலனைப் பெறலாம்.