நடிகர் விஜய்யின் மகன் ஜேசன் சஞ்சய் முதன்முறையாக இயக்கியுள்ள ‘சிக்மா’ திரைப்படத்தில் சந்தீப் கிஷன் கதாநாயகனாக நடித்துள்ளார். லைகா நிறுவனம் தயாரித்துள்ள இந்தப் படத்திற்கு தமன் இசையமைத்துள்ளார். நீண்ட நாட்களாக நடைபெற்று வந்த இதன் படப்பிடிப்பு நிறைவடைந்து, விரைவில் திரைக்கு வரத் தயாராக உள்ளது. இந்த நிலையில், படத்தின் விளம்பரத்திற்காக ஜேசன் சஞ்சய் அளித்த பேட்டி ஒன்று இணையத்தில் வைரலாகி வருகிறது.
சிறு வயதிலேயே கேமரா முன் தோன்றியதால் ஜேசன் சஞ்சய் நடிகராவார் என்றே அனைவரும் எதிர்பார்த்தனர். ஆனால், அவர் லண்டனுக்குச் சென்று இயக்கம் பயின்று வந்து இயக்குநராக அவதாரமெடுத்துள்ளார். ஆரம்பத்தில் அவருக்கு இந்த வாய்ப்பு கிடைத்தது குறித்துப் பல்வேறு சர்ச்சைகளும் வதந்திகளும் பரவின. இருப்பினும், அனைத்துக் கேள்விகளுக்கும் முற்றுப்புள்ளி வைத்து, தனது முதல் படத்தை வெற்றிகரமாக எடுத்து முடித்துள்ளார்.
தனியார் யூடியூப் சேனலுக்கு அளித்த பேட்டியில் தனது சிறுவயது நினைவுகளை ஜேசன் சஞ்சய் பகிர்ந்து கொண்டுள்ளார். அதில், “வேட்டைக்காரன் படத்தில் நான் ஆடிய நடனத்தை இப்போது பார்த்தால் ஆச்சரியமாக இருக்கிறது. அப்போதைய ஆர்வத்தில் அந்தப் பாடலில் ஆட சம்மதித்து விட்டேன். ஆனால், படப்பிடிப்பு தளத்திற்குச் சென்றதும் அங்கிருந்த பெரிய கூட்டத்தைப் பார்த்து எனக்குப் பயம் வந்துவிட்டது” என்று கூறியுள்ளார்.
மேலும் தொடர்ந்த அவர், “பயத்தில் உடனே ஓடிச் சென்று என் அப்பாவைக் கட்டிப்பிடித்துக் கொண்டேன். அதன் பிறகு எப்படியோ தைரிய வரவழைத்துக் கொண்டு நடித்துக் கொடுத்தேன்” என்று நெகிழ்ச்சியுடன் தெரிவித்துள்ளார். தந்தையுடனான தனது சிறுவயது நினைவை ஜேசன் சஞ்சய் பகிர்ந்த இந்த வீடியோ, தற்போது விஜய் ரசிகர்களாலும் சோஷியல் மீடியா பயனர்களாலும் அதிகளவில் பகிரப்பட்டு வருகிறது.
