உத்தரப்பிரதேச மாநிலம் கான்பூரில் மது விருந்து ஒன்றின்போது ஏற்பட்ட சாதாரண வாக்குவாதம், கடும் தாக்குதலாக மாறிய சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.  போகர்பூர் பகுதியில், மது பேக் அளவு தொடர்பாக மாமாவுக்கும் மருமகனுக்கும் இடையே ஏற்பட்ட தகராறு வன்முறையாக மாறியுள்ளது. இதில் ஆத்திரமடைந்த மருமகன், இரும்பு தவாவால் மாமாவை சரமாரியாக தாக்கியதாக கூறப்படுகிறது.

இந்த சம்பவத்தில் காயமடைந்த முகமது பெரோஸ் மற்றும் அவரது மருமகன் இருவரும் பழைய பொருட்கள் சேகரிக்கும் தொழில் செய்து வந்தவர்கள் என தெரியவந்துள்ளது. கடந்த ஜூலை 31-ஆம் தேதி இரவு வழக்கம்போல் வேலை முடித்துவிட்டு, இருவரும் மேலும் இருவருடன் சேர்ந்து மது அருந்தியுள்ளனர். அப்போது மது ஊற்றும்போது பேக் அளவு குறித்து இருவருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது. ஆரம்பத்தில் சாதாரணமாக இருந்த தகராறு, சிறிது நேரத்தில் கைகலப்பாக மாறியுள்ளது.

வாக்குவாதம் தீவிரமடைந்த நிலையில், அங்கிருந்த மற்ற இருவரும் அங்கிருந்து விலகிச் சென்றதாக கூறப்படுகிறது. தொடர்ந்து மாமாவுக்கும் மருமகனுக்கும் இடையே சண்டை நடந்துள்ளது. சத்தம் கேட்டு அருகில் இருந்த 12 வயது சிறுவன் இருவரையும் சமாதானப்படுத்த முயன்றபோது, அவரையும் தாக்கியதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது. இதில் அந்தச் சிறுவனின் தலையிலும் காயம் ஏற்பட்டுள்ளது.

இதற்கிடையில், ஆத்திரமடைந்த மருமகன் அருகில் இருந்த இரும்பு தவாவை எடுத்து முகமது பெரோஸின் தலை, கழுத்து மற்றும் முகத்தில் தொடர்ந்து தாக்கியதாக கூறப்படுகிறது. இதில் பலத்த காயமடைந்த பெரோஸ் ரத்த வெள்ளத்தில் கீழே விழுந்தார். தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு வந்த போலீசார், காயமடைந்த இருவரையும் மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். பெரோஸின் நிலை கவலைக்கிடமாக இருப்பதால் மருத்துவர்கள் தீவிர சிகிச்சை அளித்து வருகின்றனர்.

இந்த தாக்குதலுக்குப் பிறகு மருமகன் அங்கிருந்து தப்பிச் சென்றதாக போலீசார் தெரிவித்துள்ளனர். சம்பவம் தொடர்பாக விசாரணை நடத்தி வரும் ஜாஜ்மாவ் போலீசார், புகார் கிடைத்தவுடன் வழக்குப் பதிவு செய்து நடவடிக்கை எடுக்க உள்ளதாக கூறியுள்ளனர். மேலும், தலைமறைவாக உள்ள குற்றம்சாட்டப்பட்ட நபரை பிடிக்க தனிப்படை போலீசார் தேடுதல் வேட்டையில் ஈடுபட்டு வருகின்றனர்.